செத்துப்போக பயமாக இருக்கிறது


அப்பாவும் அடியேனும், நாயும் கல்லும் போன்றவர்கள். பல காலமாக நாம் சந்தித்துக்கொள்ளவில்லை. அவர் நினைத்தமாத்திரத்தில் புறப்பட்டு வருவார். வந்தவேகத்தில் திரும்பியும் விடுவார். என்னிடம் வந்து பல ஆண்டுகளாகிவிட்டன.

தம்பி, தங்கையை அவர் அவ்வப்போது சந்திப்பதாக கதையிருக்கிறது.

நேற்று பின்மாலைப் பொழுதில் திடீர் என்று வந்தார். வெளியில் -21 குளிர். மனிதர் இதை எப்படி தாங்குகிறாரே, என்றும் வராதவர் வந்திருக்கிறாரே என்றும் நினைத்துக்கொண்டிருக்கும்போதே...

”என்டா .. தம்பிக்கு அடித்தாயாமே” என்று வழக்காடுமன்றத்தை ஆரம்பித்தார்.

குற்றம்சாட்டப்பட்ட ஒரு அப்பாவிக்கு ஆகக்குறைந்தது தன்பக்கத்து விளக்கத்தினை கொடுக்கும் உரிமையாவது இருக்கவேண்டும் அல்லவா?

அவர் கேட்ட கேள்வியின் கடைசி எழுத்து ”மே” அவரது வாயால் வெளியே வந்து எனது காதினுள் புகுந்து மூளைக்குச் செல்லுமுன்

சடார் என்று ஒரு சத்தம். அடியும் நுனியும் நடுங்கி, வியர்த்து எழும்பினேன்.

கனவு.

அப்பா, இத்தனை வயதுக்கு பிறகு, எத்தனையோ பத்து ஆண்டுகளுக்கு அப்பால் கனவில் வந்து ....... இதெல்லாம் நியாயமில்லை... ஆமா.

இப்ப பாருங்க உலகமே என்னைப் பார்த்துச் சிரிக்கிறது.

கனவில வந்தால் வேறு எத்தனையோ கதைக்கலாம் அல்லவா.

செத்துப்போகவே பயமாக இருக்கிறது. நீங்கள் அங்கேயும் இருப்பீர்களா?

பிற்குறிப்பு: நேற்று தம்பியுடன் கதைத்தபோது அவனை உறுக்கி அடக்கியது என்னவோ உண்மைதான்.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்