நான் 10 வயதிலேயே முத்திப் பழுத்த ஆள்



நண்பரின் வீட்டுக்குள் நுளைந்தவுடனேயே கண்ணில்படுவான் நண்பனின் மகன். இன்று மாப்பிள்ளையைக் காணவில்லை. எங்கே என்றேன். எங்கயாவது நிற்பான் என்று பதில் வந்தது.

அளைத்தேடிப் புறப்பட்டேன்.என்னைக் கண்டதும் விளையாடுவதற்காக ஒளிந்திருக்கிறான் என்றுதான் நினைத்தேன். ஆனால் வழமையாக ஒளிந்திருக்கும் இடங்களில் அவன் இல்லை.

மாப்பிள்ளையின் அறைக் கதவு பூட்டியிருந்தது. கதவில் காதைவைத்துக் கேட்டேன். தொலைக்காட்சிச் சத்தங்கள்.

வெளியில் ஹாலில் பெரிய தொலைக்காட்சி இருக்கிறதே... இவன் ஏன் அறையை பூட்டிவைத்து தொலைக்காட்சியைப் பார்க்கிறான் என்று எனது அப்பரின் போலீஸ் மூளை வேலைசெய்யத்தொடங்கியது.

கதவைத் தட்டினேன். தொலைக்காட்சிச் சத்தம் நின்றுபோனது. பூனைபோல் மெதுவாய் நடந்துவந்து மாப்பிளை்ளை கதவருகே நிற்பதும் கேட்டது. இதுவும் எனது சந்தேகத்தை அதிகரிக்க...

டேய்... கள்ளப்பயலே திறவடா கதவை என்றேன்.

”ஐயோ” என்று கதவுக்குப் பின்னால் இருந்து சத்தம் வந்தது.

”திறவடா கதவை” என்றேன்

கதவை சற்று திறந்து வாசலை அடைத்தபடியே ”உனக்கு என்ன வேணும” என்றான்.

மாப்பிள்ளை நான் அவரது அறைக்குள் வருவதை விரும்பவில்லை என்று புரிந்தது.

சரி.. ஏதோ திருகுதாளம் பண்ணுகிறான் என்று முடிவுசெய்துகொண்டேன், தலையை மட்டும் அறைக்குள் விட்டுப் பார்த்தேன்.

தொலைக்காட்சியில் 18 என்று எழுதி ஒரு பெரிய வட்டம்போட்டிருந்தது. அருகில் சில உருவங்கள்.

எல்லாம் புரிந்துபோயிற்று எனக்கு. மவனே.. 18 வயதுக்கு மேற்பட்ட கேம் விளையாடுகிறாய்.... பொறு கொப்பரிடம் சொல்கிறேன் என்றேன்.

”சஞசயன் மாமா” என்று தேனொழுக அழைத்தான். மாப்பிளை என்னை மயக்க முயற்சிக்கிறார் என்று நினைத்து ..

”என்ன?” என்றேன் கடுமையான குரலில்.

”உனக்கு ஒன்றும் தெரியாது” என்றான்.

”டேய் ... நான் 10 வயதிலேயே முத்திப் பழுத்த ஆள்” என்னிடம் கதைவிடாதே. இண்டைக்கு நீ கொப்பரிடம் வாங்கிக் கட்டப்போகிறாய். இனி உனக்கு ஒரு கிழமைக்கு தொலைக்காட்சி, கணிணி, ஐபாட், கேம் ஒன்றும் இல்லாமல் ஆக்குகிறேன் பார்” என்றேன்.

அவன் பயந்ததாய் இல்லை.

” நீ வளர்ந்த அளவுக்கு உனக்கு மூளை வரவில்லை. ஒனக்கு ஒன்றும் தெரியாது” என்றான் மீண்டும்.

எனக்கு கதை விடுகிறான் என்று நினைத்தேன். அதற்கு ஒரு காரணமும் உண்டு.

ஒரு நாள், நானும் இவனும் வெளியே கால்ப்பந்து விளையாடிக்கொண்டிருந்தோம். நாம் சற்று நேரம் ஓய்வெடுத்தபோது ஒரு கதை சொல்கிறேன். ஆனால் நீ ஒருவரிடமும் சொல்லக்கூபடாது என்று சத்தியமும் வாங்கிக்கொண்டான்.

இவனின் தாத்தாவுக்கு 20 வயதுகளில் ஒரு மகன் உண்டு. அவனும் கணிணி விளையாட்டுக்களில் பிரியுமுள்ளவன்.

ஒரு நாள் தாத்தாவும், பேரனும் தாத்தாவின் மகன் வீட்டில் இல்லாதபோது அவனது கணிணியில் திருட்டுத்தனமாக கணிணி விளையாட்டு விளையாடியிருக்கிறார்கள். அது 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் விளையாட்டு. அங்கு ஒரு காட்சியில் ஒரு பெண்ணின் மார்பகங்கள் தெரிந்ததாம். அவள் ஒருவனுக்கு முத்தமிட்டாளாம்.

தாத்தா உடனே அதை நிறுத்திவிட்டு, இதைப் பற்றி எவரிடமும் பேசப்படாது என்று ஒப்பந்தம் செய்தாராம். அதன் பின் அந்தக் கணிணியில் தாத்தா கைவைக்க விடுவதில்லை என்றான். கண்களில் 12 வயதுக்குரிய குறுகுறுப்பு தெரிந்தது.

அந்த விளையாட்டைத்தான் இவன் விளையாடுகிறான் என்று எனது திருட்டு மூளை நினைத்ததில் என்ன தவறிருக்கிறது?


வெளியே அமர்ந்திருந்த பெற்றோரிடம் ” பெடியன் கணிணியில் அடல்ஸ் ஒன்லி விளையாட்டு விளையாடுகிறான்” என்றேன்.

மைன்ட் வாய்ஸ் ”செத்தான்டா சேகரு” நினைத்துக்கொண்டது.

மாப்பிள்ளை அழைக்கப்பட்டார். நெஞ்சை நிமிர்த்தியபடியே வந்தான்.

”என்ன?” என்றான் பெற்றொரைப் பார்த்து. அந்த ”என்ன”வில் பெரும் அலட்சியம் இருந்தது.

விசாரணை தொடங்கியது.

கடைசிவரையில் நான் 18 வயது விளையாட்டு விளைாயாடவிலலை என்று சாதித்தான்.

நானும் குறுக்கு விசாரணைசெய்து பார்த்தேன்.
எதுவும் பலிக்கவில்லை.

பின்பு என்னைக் காட்டி

”சஞ்சயன்மாமாவுக்கு கணிணிவிளையாட்கள்பற்றி ஒன்றுமே தெரியாது” என்றபடியே நக்கலாய் ஒரு சிரிப்பு சிரிததான்.

பின்பு அவனே தொடர்ந்தான்.

”ஒரு புத்தகத்தில் எத்தனை அத்தியாயங்கள் இருக்கும்?”

பெற்றோர்கள் பதில் சொல்வதற்கு யோசித்தபோ ... நான் ” அது புத்தகத்தைப் பொறுத்தது 5, 10, 50 என்று இருக்கும் என்றேன்.

”இது மட்டும் உனக்கு தெரிகிறது.... இதைப்போலத்தான் எனது விளையாட்டிலும் 25 அத்தியாயங்கள் உண்டு. நீ வந்தபோது 18வது அத்தியாயத்தில் இருந்தேன்” என்றுவிட்டு விளையாட்டுபற்றிய CD யை கொண்டுவந்து என் மடியில்போட்டான். அதில் அது 7 வயதுக்குரிய விளையாட்டு என்றிருந்தது.

எனக்கு இப்ப 12 வயது .நான் இது விளையாடலாம் என்றபடியே எனக்கு இடுப்பால் ஒரு இடி இடித்துவிட்டு மறைந்துபோனான்.

அவனது பெற்றோர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தனர்.

அதைத் தாங்கிக் கொள்வேன். ஆனால் படுபாவிப்பயல் சிரித்தானே ஒரு நக்கல் சிரிப்பு ...

என்ட ஒஸ்லோ முருகா... ஏனய்யா என்னை இப்படி சோதிக்கிறாய்?

08.07.2015

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்