அவள் ஒரு கட்டளைத் தளபதி

எனது நண்பரொருவருக்கு மூன்று பெண் குழந்தைகள். இளையவளுக்கு14 வயது. அவள் ஒரு சிறுக்கி.

நான் அவர்களின் வீட்டுக்குச் செல்லும் நேரங்களின்போது அவள் அங்கில்லாவிட்டால் அவர்களின் வீடு அசாத்திய அமைதியாய் இருக்கும். என் மனம் அவளைத் தேடிக்கொண்டிருக்கும். அவர்களின் வீட்டினை கலகலப்பாய் வைத்திருப்பது அவளே.

14 வயதின் அற்புதம் அவள். அழகு, அலட்சியம், கர்வம், கோபம், போராட்டக் குணம், தான் நினைத்ததே சரியானது,  மற்றையவர்கள் அனைவரும் முட்டாள்கள் என்ற எண்ணம் இப்படி அனைத்துடனும் அவள் இருப்பாள். எனது கதாநாயகி அவள்.

அவளை, அவளின் வயதுக்கான  ஹார்மோன்களின் ஆட்டங்களுடன் நான் ரசிப்பேன். அவ்வப்போது  எனது மொட்டையில் தாளம்தட்டியபடியே அவள் பாடுவதுமுண்டு. சஞ்சயன் மாமா என்று என்னை அழைப்பாள்.

அவள் எப்போதும் என் பூக்குட்டியை நினைவூட்டுவாள். என் பூக்குட்டிக்கும் இப்போது 14 வயது. என்னுடன் வாழ்ந்திருந்தால் இவளைப் போலவே அட்டகாசமாய் வாழ்ந்திருப்பாளோ என்று நான் நினைப்பதுண்டு. பெண் குழந்தைகளுக்கு  அடிமையாய் வாழ்வது அத்தனை அற்புதமானது. நண்பரின் மகள் நண்பரிடம் செல்லம்கொஞ்சும்போது நான் பொறாமைப்படுவேன். நண்பர் கொடுத்துவைத்தவர்.

அவள்தான் அவர்களின் வீட்டின் கட்டளைத் தளபதி. நண்பர் என்னதான் கண்டிப்பாய் இருந்தாலும் கடைசியில் அடங்கிப்போவது அவர்தான். அவளிடமான அவரின் தோல்விகள் என் மனதுக்கு இதமாக இருக்கும். அவளின் தாயார் மிகக் கண்டிப்பானவர்தான் என்றாலும், இவளிடம் அவரின் திருவிளையாடல்கள் செல்லாது. சகோதரிகளும் அப்படியே.


அழகாய் நடனமாடுவாள், அரங்கேற்றம் நடக்கவிருக்கிறது. கூடைப்பந்து விளையாடும் எனக்குத் தெரிந்த ஒரே ஒரு பெண்ணும் அவள்தான்.  மூச்சு விடுவதைவிடவும் ‌தனது ஐபோன் முக்கியமானது என்று நம்புபவள். அதை அவள் பிரிந்திருக்கவே மாட்டாள்.

எனது உலகத்தை அழகாக்கும் அற்புதத் தேவதை அவள்.

இன்று அவளையும், சகோதரியையும், எனது நண்பரையும்  ஒரு இடத்தில் இறக்கிவிடுவது என்று ஒப்பந்தமாகியது.

வாகனத்தில் ஏறுவாற்கு முன்பே "சஞ்சயன் மாமா! உங்களிடம் புதிய தமிழ்ப்பாட்டு இருக்கிறதா என்றாள்"

என்னிடம் 80களின் பாட்டுகள் இருந்தன. இருப்பினும்  அவளுடன் தனவுவோம் என்று நினைத்தபடியே "செம  ஹிட்டான பாட்டுகள்  இருக்கிறதடி அம்மா" என்றேன்.

"யாருக்கு கதை விடுகிறாய். அப்பாவைப்போல உங்களிடமும்  காதுகொடுத்துக் கேட்கமுடியாத  பழைய பாட்டு இருக்கும்" என்றாள்.

அசடு போல் சிரித்தேன்.

"என்னிடம் பாட்டு இருக்கிறது ஐபோனில் இருந்து வாகனத்தித்தின் இசைக்கருவிக்கு பாடல்களை போடலாம்" என்றாள்.

"எப்படி போடுவாய் என்றேன்"

"அதை  என்னிடம் விட்டுவிடுங்கள்" என்றாள் நக்கலாய்.

வாகனத்தில் ஏறிக்கொண்டோம். நான் வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்தேன்.
நண்பர் எனக்கு அருகில் உட்கார்ந்திருந்தார்.

"அப்பா" ப்ளூ டூத் மூலம் எனது தொலைபேசியை இணையுங்கள் என்றாள்"

நண்பர்  ”தொடங்கீட்டாள்” என்றபடியே ... அங்கிருந்த அனைத்து பட்டன்களையும் அமத்தத் தொடங்கினார்.

"அப்பா" என்றாள் மிகக் கடுமையாக.
"ஙே" என்றவாறே நண்பர் பரிதாபமாக அவளைப் பார்த்தார்.
" ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது உங்களுக்கு" என்றாள்

நண்பரும் நானும் கடைக்கண்ணால் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.  நான் கொடுப்புக்குள் சிரித்தேன். நண்பரும் சிரித்தார்.

அதன்பின், "அப்பா!  நான் சொல்வதை செய்" என்றாள்
நண்பர் தலையை ஆட்டினார். ( மனைவிக்கும் இத்தனை பயபக்தியுடன் தலையாட்டியிருப்பாரா என்பது சந்தேகமே)

"டெலிபோன் பட்டனை அமத்து"

நண்பர் தேடுகிறார்.

அவள் பின் இருக்கையில் இருந்தபடியே அவரை இயக்குகிறாள். "வலது பக்கத்தில், இரண்டாவது பட்டன்"
நண்பர் அமத்துகிறார்.

"கெட்டிக்காரன்" என்றாள் நோர்வேஜிய மொழியில்.

நண்பரின் முகம் பூரிக்கிறது

"இனி புளூடூத் பட்டனை அமத்து"

நண்பர் தடுமாறுகிறார்

"கண்ணுக்கு முன்னே இருக்கிதே தெரியலியா"

நண்பர் .. "ஓம் என்ன"... என்றபடியே அமத்துகிறார்.

"இனி சேர்ச் என்பதை அமத்து"

நண்பர் முழுசுகிறார்.

" ஓஓஓ அப்பா.. .உனக்கும் எலக்ரொனிக்கும் சம்பந்தமே இல்லை" என்றபடியே  பின்னிருக்கையில் இருந்து முன்னே வந்து ஒரு பட்டனை அமத்தினாள்.

திரையில் அவளின் தொலைபேசியின் பெயர் தெரிகிறது.

" பெயரை அமத்துடா ... " என்கிறாள் செல்லமாக

நண்பர் கடைக்கண்ணால் என்னுடன் பேசியபடியே அமத்துகிறார்


திடீர் என்று எனது வாகனத்தில் இல்லாத ஒரு குத்துப்பாட்டு பாடத்தொடங்கியது.

கண்ணாடியினூடாக அவளைப் பார்த்தேன்.

என்ன பார்க்கிறாய் என்பது போல பெருமிதத்துடன் என்னைப் பார்த்தாள்.
"சஞ்சயன் மாமா! சத்தத்தை அதிகமாக வை"  என்று கட்டளையிட்டாள்.

முடிந்தளவுக்கு திருகினேன். ஒலிபெருக்கி அதிர்ந்து கத்தியது.

நண்பர் காதுளை கைகளால் பொத்திக்கொண்டார்.

அவளோ, பின்னிருக்கையில் இருந்தபடியே தலையை ஆட்டியபடியே  தாளம் போட்டுக்கொண்டிருந்தாள்"

நண்பர் என்னைப் பார்த்து கண்ணைச் சுருக்கினார்.

நான் அதை காணாததுபோல் இருந்தேன்.

நண்பர் சத்தத்தை குறைத்தார்.

"சஞ்சயன் மாமா,  பாட்டை ரசிக்கிறார். அவரைக் கேட்காமல் சத்தத்தை குறைக்கிறாயே ... உனக்கு பழக்கவழக்கம் தெரியாது" என்றாள் அவள்.

நண்பர் என்னை பரிதாபமாகப் பார்த்தார்.  நான் எனக்கு பிடிக்காத ஒரு குத்துப்பாட்டுக்கு தலையாட்டிக்கொண்டிருந்தேன்.

நண்பர் ஒலிபெருக்கியின் சத்தத்தை அதிகமாக்கினார்.

"அது" என்பதுபோல் அவள் நண்பரைப் பார்த்தார்.

வாகனம் வேகமான பாதையில் சென்று கொண்டிருந்தது.

பாட்டுகள் மாறின. இசை மாறியது, துள்ளல் இசை ஆரம்பித்தது.

என்னையறியாமலே தலை ஆட்டி ஆட்டி ரசித்துக்கொண்டிருந்தேன். நண்பர் கடுப்பில் என்னை பார்த்துக்கொண்டிருந்தார்.

கண்ணாடியில் பின்னால் உட்கார்ந்திருந்த அவளைப் பார்த்தேன். பெருவிரலை தூக்கிக் காட்டி தனது பாராட்டை எனக்கு தெரிவித்தாள். கடைக்கண்ணால் நண்பர் என்னை பார்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியபின்பு அவளைப் பார்த்து புன்னகைத்தேன். தெய்வீகமாய் புன்னகைத்தாள். அதில் நான் கரைந்துபோனேன்.

அவளின் நண்பியை நாம் ஏற்றிக்கொள்ளவேண்டும் என்று ஒப்பந்தமிருந்தது. நண்பர் நேரமாகிறது என்றார். " சூ... சத்தம்  போடப்படாது" என்று கூறியபடியே நண்பியினை அழைத்துவந்து வாகனத்தில் ஏற்றினாள். நண்பர் மூச்சுப பேச்சின்றி உட்கார்ந்திருந்தார்.

மீண்டும் வாகனம் ஓடத் தொடங்கியது

"சஞ்சயன் மாமா, சத்தத்தை அதிகமாக்கு என்றாள்"

நான் முடிந்தளவுக்கு திருகினேன்
நண்பர் பல்லை நெருமிக்கொண்டிருந்ததை இருந்ததை அவதானித்தேன்.

பின்னால் இருந்த இருக்கையில் அவள் தன்னை மறந்து ஆடிக்கொண்டிருந்தாள். அவளின் நண்பியிடமும் நடனத்துக்கான அசைவுகள் தெரிந்தன.

நானும் தலையாட்டியபடியே  வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்தேன்.

அவர்களை இறக்கிவிடும் இடம் வந்தது.

நண்பர் ”அப்பாடா” என்றபடியே இறங்கிக்கொண்டார்.  அவளின் சகோதரியும், நண்பியும் இறங்கிக்கொண்டார்கள்


"சஞ்சயன் மாமா" என்றாள்

"என்னம்மா" என்றேன்

"புதுவருட வாழ்த்துக்கள்" என்று என்னைப் பார்த்துக் கூறியபடியே இறங்கினாள்.


என் பூக்குட்டியின் வாழ்த்தினைப் பெற்றதைப்போல் உணர்ந்து, காற்றில் நடந்துகொண்டிருந்தேன், நான்.


பெண் குழந்தைகளின் தந்தையர்கள் பாக்கியவான்கள்.

எனது நண்பர் பெரும் பாக்கியவான்.