எனது வாழ்வின் சில இரகசியங்கள்

நண்பர் ஒருவர் ஒரு கட்டுரை வேண்டும் என்றிருந்தார். அவருக்குத் தெரியும் முக்கி முக்கி எழுதுபவன் நான் இல்லை என்று. முக்கினால் இயற்கைய‌ை மீறுவது போன்றே உணர்கிறேன். எழுத்து என்பது மனதின் ஊற்று. ஊற்று தானாக ஊறவேண்டும் என நினைப்பவன் நான்.

இன்று காலையும் எதை எழுதலாம் என்று சிந்தித்தபோது எதுவும் மனதில் தோன்றவும் இல்லை, எதுவும் கண்ணில்படவும் இல்லை. ஆனால் மதியம் நீலக்கீழ் தொடரூந்தில் குந்தியிருந்தபடியே எனக்கு மிகவும் பிடித்த எஸ். ராவின் ”காந்தியோடு பேசுவேன்” வாசித்துக்கொண்டிருந்தபோது ஒரு கரு மனதில் தோன்றியது. ”காந்தியோடு பேசுவேன்” புத்தகத்தின் முதலாவது சிறுகதையில் கதையின் நாயகனான லட்சுமணண் தனது தயாருக்கு காந்திமீது இருந்த பக்தியைப் பற்றிக் குறிப்பிடுவார். காந்தியின் வாழ்க்கைமுறைகள், பழக்கவழக்கங்கள் அவரின் தாயாரை பெரிதும் கவர்கவது மட்டுமல்ல அவரை மனரீதியான மாற்றத்திற்கும் இட்டுச்செல்கிறது.

அந்த சிறு கதையை நான் இன்னும் வாசித்து முடிக்கவில்லை. ஆனாலும் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும், சில மறக்கமுடியாத மனிதர்கள், தங்களின் வாசனையை மற்றையவரும் நுகரும்படி செய்துவிட்டே கடந்துபோகிறார்கள் என்பதை நானும் உணர்ந்திருக்கிறேன். மழையில் நனைவதுபோன்றது இது. சாரல், தூரல், மழை, அடைமழை, தூவானம் என்று மழையில் பலவிதம் உண்டு. இவ்விதமான மழைகளில் நனைவது பலவித அனுபவங்களை தருவது போல பலவிதமான மனிதர்கள் என்னை ஈரலிப்பாக்கியிருக்கிறார்கள், செளிப்படையவைத்திருக்கிறார்கள். அதே வேள‌ை வேறு சிலரோ என்னை தங்கள் மழையினூடாக நோயாளியாக்கிவிட்டும் கடந்துபோயிருக்காறார்கள்.

மேற்கூறப்பட்டவர்களில் சிலரைப்பற்றிய நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். ஆனால் இன்றோ சில சம்பவங்களை பதிவதே எனதுநோக்கம்.

முதலாமவர் என்னை சிறுகச் சிறுக செதுக்கியவர்களில் முதன்மையானவர், எனது மனதில் அவருக்கென்று ஒரு தனி இடமுண்டு. அவர் இன்றேல் நான், இப்போது, வேறு எங்கோ, எப்படியே ஒன்றுக்கும் உதாவதவனாய் இருந்திருப்பேன். ஓருதனிமனிதனின் ஆளுமை என்னை எப்படியெல்லாம் மாற்றியது என்பதற்கு எனது தாயாரும், என்னை பால்யத்தில் இருந்து அறிந்து ஒரு சில நண்பர்களுமே அறிவார்கள். இன்று காலையும் அவர் பற்றிய ஒரு புத்தகம் என்னையில் இருந்தது என்பதை இதை எழுதும் இக்கணம் நினைத்துப்பார்க்கிறேன். ஆச்சர்யமாக இருக்கிறது நிகழ்வுகளின் கோர்வைகளைப் பார்க்கும்போது. நான் குறிப்பிடுவது வேறு யாருமில்லை எங்கள் பேராசான் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முன்னைநாள் அதிபர் பிரின்ஸ் காசிநாதர் அவர்களையே.

கண்டிப்பின் மூலமாக மட்டுமே பலருக்கு அவரை அறிமுகம் இருக்கும். எனக்கும் பல ஆண்டுகள் அப்படியே இருந்தது. ஆனால் காலமும், அனுபவமும் மனிதர்களையும் அவர்களது ஆளுமைகளை எனக்கு உணர்த்தியிருக்கிறது. 1970களின் நடுப்பகுதி, மட்டக்களப்பின் முக்கிய பாடசாலையில் சேர்த்துவிடப்படுகிறேன். அன்று தொடங்கிய பக்தி இன்றைய நாள்வரையில் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. என் வாழ்வில் மிக முக்கியமான மனிதராக இருப்பவர் இவர்.

7ம் வகுப்பில் அன்சார் என்று ஒரு வகுப்புதோழன் இருந்தான். நாம் இருவரும் விடுதி மாணவர்கள். நான் பொருட்கள் எதிலும் கவனமில்லாதவன். அன்சார் அதற்கு எதிர்க் குணம் உள்ளவன். அந் நாட்களில் கருவிப்பெட்டி என்று ஒரு பெட்டி இருந்தது. அதை நாம் கொம்பஸ் பெட்டி என்றும் அழைத்தோம். ஒரு நாள் எனது கருவிப்பெட்டியின் உள் இருந்த அடிமட்டத்‌தை காணவில்லை. கணிதப்பாடம் ஆரம்பித்திருந்தது. அந்த ஆசிரியரோ கடும் கண்டிப்பானவர். எங்கே அடிமட்டம் என்று கேட்பார். இல்லை என்றால் தொலைந்தோம். வயிற்றில் கிள்ளுவார். உயிர்போகும் வலி அது. எனவே அருகில் உட்கார்ந்திருந்த அன்சாரின் அடிமட்டத்தை எடுத்து எனது கருவிப்பெட்டியினுள் வைத்துவிட்டேன். அன்று அன்சார் வயிற்றில் கிள்ளு வாங்கினான். என்னிடம் அவனது அடிமட்டம் இருப்பதையும் கண்டுகொண்டான். மறுநாள் காலை அதிபரிடம் சென்று விடயத்தைக்கூறியபோது நான் அழைக்கப்பட்டேன். இருவரையும் விசாரித்தார். பின்பு இவ்வாறு தீர்ப்பு வளங்கினார். சஞ்சயன் அவனின் அடிமட்டத்‌தை நீ உடனே கொடுக்கவேண்டும். இன்று மாலை என்து வீட்டுக்கு வரவேண்டும் என்றிருந்தது அவரது தீர்ப்பு.

அவனின் அடிமட்டத்தை கொடுப்பது பிரச்சனையில்லாத விடயம். ஆனால் அவரின் வீட்டுக்கு அழைக்கப்படுவது என்பது அதீத குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தீர்ப்பு. அவரின் வீட்டு விறாந்தையில் நின்றபடியே பலரும் அடிவாங்கியிருப்பதை நான் அறிந்திருந்திருந்தது மட்டுமல்ல கண்டுமிருக்கிறேன். எனது கதியும் அதுதான் என்று நினைத்தபடியே அவரின் வீட்டுக்குச் சென்றபோது அன்பாய் அழைத்து முதல் ஆச்சர்யத்தை தந்தார். திருடுவது தவறு என்தைப்பற்றி 2 - 3 நீதிக்கதைகள் கூறினார். குடிக்க குளிர்பானமும் தந்து அதன்பின், ஏன் அன்சாரின் அடிமட்டத்தை திருடினாயா என்றார். அவரின் உரையாடல் ஏள்கனவே மனதை நெகிழப்பண்ணியிருந்தது. மனம் முழுவதும் குற்ற உணர்ச்சி நிறைந்திருந்தது. தலையைக் குனிந்தபடியே இருந்தேன். கண்ணீர்த் துளியொன்று நிலத்தில் விழுந்து தெறித்தது. தோளில் கையொன்று தோழமையுடன் அழுந்தியயோது என்னையறியாமலே ”இனி எடுக்கமாட்டேன், சேர் என்றேன்”. தெரியும் என்றார் உயிரை ஊடுருவும் அவரின் கணீர் என்ற குரலில்.

இன்னொருமுறை 17 என்று இருந்த கணிதப்பாட புள்ளிகளை 77 என்று மாற்றியதால் கூட்டுத்தொகை பிழைத்ததை அவதானித்த எனது தந்தையார், அதிபரிடம் செய்தியைக் கூற, அம் முறையும் மனச்சாட்சியுடன் பேசு என்னும் தொனியில் அறிவுரை தந்தவர். நகைச்சுவை, இனச்சமத்துவம், சிரமதானம், எதையும் நேருக்கு நேர் பேசுதல், உண்மை, அச்சம் தவிர் என்று பலதையும் கற்றுத்தந்தவர் அவர். இன்றும் இலங்கை சென்றால் அவரை நான் சந்திக்காது திரும்பவது இல்லை. அருகிலமர்த்தி இன்றும் அன்பாய் பேசும் ஆசான் அவர்.

அடுத்தவர் ஞானி மாமா. இவரைப்பற்றி ஒரு முழுப் பதிவு எழுதியிருக்கிறேன். மாமா என்னும் சொல்லின் மகத்துவத்தை அறியத்தந்த மனிதர், அவர். உறவினர் அல்லர் அவர். ஆனாலும் உறவினரைவிட அதிக அன்பு செலுத்தியவர்.

எனது தாயாருடன் பிபிலை வைத்தியசாலையில் தொழில்புரிந்த பல்வைத்தியர் அவர். மாலையில் எமது வீட்டில் தான் ஞானி மாமாவைப்போன்ற வயதுடையவர்கள் கூடுவார்கள். அவர்களுக்கு சராசரி 25 - 26 வயதிருக்கும். கரம் போட்ஐ சுற்றியிருந்து கதைத்து, விளையாடி, பலமாய் சிரித்து, தேநீர் அருந்தி சற்று ”கணகணப்பில்” வரும் எனது தந்தையுடன் தனவிக் கொண்டிருப்பார்கள். ஞானி மாமாவின் கதிரையின் கைப்பிடியில் உட்கார்ந்திருப்பேன் நான். அவரின் அருகாமையே மகிழ்ச்சியைத் தரும். ”இண்டைக்கு ஒரு குளப்படியும் செய்யலயாடா” என்பார் தினமும் என்னைக் காணும் பொழுதுகளில். நான் அதிகமாய் குழப்படி செய்யவேண்டும் என்று விரும்பினாரோ என்னவோ. எனது தந்தை என்னைப்பார்த்து ஏதும் கண்டிப்பாகக் கதைத்தால் தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்பார் அவரிடம். பெரிசும் அடங்கிப்போனது புதினமாய், அவரிடம்.

பல்வைத்தியராக அறிமுகமாகி, குடும்ப நண்பராகமாறி 1980களின் நடுப்பகுதியில் ஒரு ஈழ விடுதலை இயக்கத்தால் கொலைசெய்யப்பட்டார். (பட்டிணி போட்டே அவரை கொலைசெய்தார்கள் என்றார் அவரின் தாயார் ஒர் நாள்). அந்நாட்களில் புகைப்படக்கருவியுடன் இவரைக் காணலாம். எனது தம்பியையும் என்னையும் அதிகமாய் புகைப்படம் எடுத்தவர் இவரே. எனக்குள் இருக்கும் புகைப்படக்கலையின் மீதான ஆர்வத்தை தொடக்கியவரும் ஞானி மாமாதான். சைக்கில் ஓட்டப்பழக்கியது. ஓடும் சைக்கிலில் பாய்ந்து ஏற, இறங்கப் பழக்கியது, ஆறுகளில் குளிக்க, நீர்வீழ்ச்சிகளைப்பார்க்க, கொழும்பு, பேராதெனிய பல்கலைக்கழகம், திருகோணமலை என்று பலதையும் எனக்கு அறிமுகப்படுத்தியவர். பதின்மவயதினுருடன் எவ்வாறு பழகவேண்டும், எவ்வாறு அவர்களுக்கு வழிகாட்டவேண்டும், என்பதை நன்கு அறிந்திருந்தார். எங்கள் வீட்டில் ”ஞானி” க்கென்றொரு இடம் இருந்தது. இப்போதும் உண்டு, இனியும் இருந்துகொணடே இருக்கும்.

அடுத்தவரைப்பற்றியும் நான் தாயிலும் மேலான தாய் என்று ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். எனது தாயாருக்கு சற்றும் குறையாத அளவு அன்பையும், பெரு மரியாதையையும் வைத்திருக்கிறேன் அவரில். அவர் ஒரு சிங்களவர். எங்கள் வீட்டில் ஏறத்தாள 40 ஆண்டுகளாக வாழ்ந்திருந்தவர். 62ம் ஆண்டு சுகயீனமான எனது அக்காவை பராமரிப்பதற்காய் வந்தவர். வாழ்க்கை எமக்குத் அறிமுகப்படுத்திய அளப்பரிய பரிசு அவர். சிங்களமொழி தங்கைக்கும், தம்பிக்கும், எனக்கும் வசப்படுவதற்கு இவரே காரணம். அப்பாவும் அம்மாவும் இவரை தங்கள் சகோதரியாகவே பார்த்தனர். எமக்கு அனைத்தும் அவரே. வீட்டின் முழு அதிகாரமும் அவரிடம் இருந்தது. லொக்கு புத்தா (பெரிய (மூத்த) மகன்) என்பதால் பெரு மரியாதை எனக்கு. இருப்பினும் கண்டிப்பும் அப்படியே. மனிதர்களிடம் வேறுபாடு என்பது இல்லை என்பதை தனது வாழ்க்கைமூலமாக அறியத்தந்தவர் இவர். பிறப்பில்தான் உறவுகள் உருவாகின்றன என்பதை பொய்ப்பித்தவர். நான் அவரை எம்மி என்று எனது மழழைமொழியில் அழித்ததால் அதுவே அவரது பெயராகியது.

நான் 2 வருடங்கள் கொழும்பில் எனது தாய்மாமா வீட்டில் தங்கியிருந்து கல்விகற்றேன். எம்மியின் அன்பில் உருகிய காலம் அது. நான் வீடு வரும்போது, என்னைக் கண்டதும் எம்மி சொல்லும் முதல் வார்த்தை ”புத்தா கெட்டுவெலா நே” என்பதாகும்.. அதாவது மகன் மெலிந்து விட்டாரென்பதாகும். மாமா என்ன என்னை கொலைப்பட்டினியாபோட்டார், கொழும்பில், நான் மெலிவதற்கு? ஆனால் எம்மி எப்போது கொழும்பில் இருந்து வந்தாலும் இதையே மறக்காமல் சொல்லிக் கொண்டிருந்தார்.

எள்ளுருண்டையில் இருந்து பல் வகை வாழைப்பழங்கள், பல்வ‌கை உணவுகள் என நான் வீட்டிலிருக்கும் ஒரு மாதமும் எனக்கு திருவிழா நடந்த காலமது. மெலிந்தவனை தெம்பாக்குகிறேன் என்று அவர் செய்த இம்சைகள் கொஞ்சமா நஞ்சமா?

ஒரு முறை காய்ச்சல் கண்டு பல நாட்கள் படுத்திருந்தேன்.ஆங்கில மருந்துக்கு காய்ச்சல் அடங்கவில்லை. அந் நாட்களில் ஒரு நாள் வீடே அல்லோலகல்லோலப்பட்டது. எம்மி அறம்புறமாக கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டிருக்க, யார் யாரோ வந்து பந்தல் போட்டார்கள். உள்ளூர் மந்திரவாதிகள் வந்து மந்திரித்தார்கள், புத்தபிக்குகள் விடிய விடிய ”பிரித்” ஓதினார்கள். அடுத்த நாள் மந்திரித்த தண்ணீரில் என்னைக் குளிப்பாட்டினார்கள். காய்ச்சல் தன் பாட்டில் அகன்றுபோனது ஆனால் எம்மியோ எல்லாம் மந்திரத்தின் மகிமைதான் எனச் சொன்னார். எனக்கு கண்ணூறு பட்டிருந்ததாம் அதுதான் காய்ச்சல் வந்ததாம்.

எங்கும் வெளியில் போய்வந்தால் சிரட்டைகளை கொளுத்தித் தணலாக்கி ஒரு கையில் உப்பு, காய்ந்தமிளகாய் இன்னும் ஏதோ எல்லாம் எடுத்து சாமிக்குத் தீபம் காட்டுவது போல எனக்கும் தம்பி தங்கைக்கும் காட்டி சிரட்டைத் தணலில் கொட்டுவார். அது பெரிதாய் வெடித்துச் சத்தம் போட்டால் என்னில் யாரோ பெரிய கண்வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தம். ஏறத்தாள தினமும் என்னில் பலர் கண்வைத்துக்கொண்டிருந்தார்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது.

1962 இல் இருந்து 2001ம் ஆண்டு என் மடியில் உயிர்விடும்வரை தன்னலனை மதியாது எங்கள் குடும்பத்தின் நலனை மட்டுமே விரும்பிய உன்னதமானதோர் தாய் அவர்.

அடுத்தவரும் ஒரு சிங்களவரே. எனக்குள் உன்னாலும் முடியும் என்று நம்பிக்கையை பதின்மவயதில் ஏற்படுத்தியவர், சந்திரே ஐய்யா (ஐய்யா என்றால் சிங்களத்தில் அண்ணண் என்று பொருள்படும்). எமது கிராமத்தின் சந்தையில் மரக்கறிவிற்கும் மனிதர். எமது Eravur United கிறிக்கட் அணியின் பயிட்சியாளர். அவரிடம் ஓதோவொரு ஆளுமை இருந்தது. எங்கள கிறிக்கட் அணி சிங்களவர்கள், முஸ்லீம்கள், தமிழர்கள் என்று மூவினமும் கலந்த அணி. இவரின் பயிற்சியின் கீழ் மட்டக்களப்பில் பேசப்படும் அணியாக மாற்றப்பட்டோம். அவர் சாரத்துடனேயே விளையாடுவார் என்பது இன்னும் நினைவில் இருக்கிறது.

அந்நாட்களில் என்னைப்பற்றி ஊருக்குள் இருந்த பார்வையை மிக எளிதாக குறிப்பிடுவதாயின் அது இப்படி இருக்கும் ”ஏறத்தாள ஒரு காவாலி, இது உருப்படாது, டாக்டர் அம்மாவின் பெயரைக்கெடுக்க பிறந்திருக்கிறது”. இதை மெதுவாக எனக்குள் ஊறப்போட்டவர் இவரே. அதிலும் 10ம் வகுப்பு பரீட்சையில் சித்‌தியடையும் வழியைப்பார், உன்னால் முடியும் என்று அடிக்கடி கூறுவார். நான் 10ம் வகுப்பில் சராசரியைவிட அதிக புள்ளிகளை பெற்றது எனக்கு பெரு அதிர்ச்சியை தந்திருந்த ஒரு நாளின் மாலைப்பொழுதில், என்னை அழைத்து கையில் ஒரு பரிசினைத் திணித்தார். திறந்துபார்த்தேன். கடும் மண்ணிறமான KG பேனையொன்று இருந்தது. பலரின் கணிப்பில் மண் தூவியிருக்கிறாய் என்று முதுகில் ஓங்கி அறைந்தார். இருவரும் சிரித்துக்கொண்டோம்.

1985இல் ஆரம்பத்தில் போர்மேகங்கள் எமது ஊரையும் சூழ்ந்தபோது அவரின் தொடர்பு அற்றுப்போனது. அன்றில் இருந்து இன்றுவரை எத்தனையோ வழிகளில் அவரைத்தேடிக்கொண்டிருக்கிறேன். ஏறத்தாள 30 ஆண்டுகள் கடந்துபோயிருக்கின்றன அவரை இறுதியாய் சந்தித்து. இருப்பினும் மனதினுள் வாழும் மனிதர்களில் இவரும் முக்கியமானவர். இவரை ஒருநாள் சந்திப்பேன். வாழ்க்கை ஏமாற்றாது என்ற நம்பிக்கை இருக்கிறது, எனக்கு.

அடுத்தவர் நோர்வே நாட்டவர். இவருடனும் இவர் குடும்பத்துடனும் எனக்கு அறிமுகம் கிடைத்தது வைகாசி மாதம் 1987. அந்நாள் மிக நன்றாகவே நினைவிருக்கிறது. அவரிடம் கார் இருக்கவில்லை. மென் கரிய நிறத்த்தில் ஒரு வான் (Van) இருந்தது. அதில் 8 இருக்கைகள் இருந்தன. சாரதியையும் இணைத்தால் 9 இருக்கைகள். நாம் தங்கியிருந்த இடத்திற்கு வந்திருந்தார். தனது வீட்டிற்கு சிலரை அழைத்துப்போவதற்கு விரும்புவதாகக்கூறினார். அன்று அவருடன் அவரின் வீட்டுக்குச்சென்றது எனது வாழ்வின் முக்கியநாள் என்பதை நான் இன்று உணர்கிறேன். அவருக்கு நான்கு குழந்தைகள். இரண்டு ஆண்குழந்தைகளில் இருவர் இரட்டைக் குழந்தைகள். மனைவி வடக்கு நோர்வேயைச்சேர்ந்தவர். அந்நாட்களில் எனது நோர்வேஜியப் புலமை பூஜ்ஜியம். ஆங்கிலப்புலமை இலங்கையில் இருந்து வெளியேறியவர்களுக்கு இருந்ததுபோன்றளவே இருந்தது.

நாட்கள் செல்லச்செல்லஅவரது வீட்டுக்குச் சென்ற தமிழர்களின் எண்ணிக்கை 2 - 3 ஆகக் குறைந்துபோனது. காரணம் கேட்டால் அந்த மனிதர் விஷக்கடி கடிக்கிறார் என்றார்கள் நண்பர்கள். நான் அவரின் குழந்தைகளுடன் நட்பாகிப்போனேன். அதிலும் முக்கியமாய் அந்த இரண்டு இ‌ரட்டைக்க்குழந்தைகளுடன். காலில் 10 சக்கரம்பூட்டிய வேகமும் குரங்குகளின் சேட்டையும் அவர்களிடம் இருந்தது. அப்போ அவர்களுக்கு 2 - 3 வயதிருக்கும். காலம் என்னை அந்தக் கிராமத்திலேயே குடியேற்றியது. அக் குடும்பத்துடன் மிகவும் நட்பாகியிருந்தேன் கடந்துபோன ஒரு வருடத்திற்கிடையில். அதன் பின் 2008ம் ஆண்டு அந்தக் கிராமத்தைவிட்டகலும்வரை ஏறத்தள தினமும் நாம் பேசிக்கொண்டோம். அவரது வீட்டினுள் அழையாவிருந்தாளியாக நுளையும் பெருமைக்குரியவன் நான் மட்டுமே. என் வீட்டிலும் அவருக்கு அந்த மரியாதை இருந்தது. எமக்கிடையில் 15 வயது அதிகமான இடைவெளி உண்டு.

நட்புக்கு வயதில்லை என்பதற்கு எமது நட்பு சாட்சியம். எதையும் அவருடன் உரையாடலாம். நிதானம், பொறுமை, புரிந்துகொள்ளும் தன்மை இப்படி பல நற்குணங்கள் அவரிடம் உண்டு. என் வாழ்க்கையில் புயலடித்தபோதெல்லாம் என்னைத் தாங்கி, உரையாடி, உயிர்பித்து, அறிவுரைகூறிய மனிதர் அவர். எனது குழந்தைகளுக்கும் அவர்கள் குடும்பத்தினருடன் நெருங்கிய நட்பு இருக்கிறது. அவர்களுக்கும் அப்படியே. அனைத்து நத்தார் நாட்களிலும் எங்களை அழைப்பார். எங்களது விசேடமான நாட்களுக்கு எங்கள் வீட்டுக்கு வருவார். அவரின் பெற்றோரும் அன்பானவர்கள். அவரது தாயார் தனது முதுமையிலும் எனது மூத்த மகள் பிறந்திருந்தபோது எம்மை நோர்வே நாட்டுக் கலாச்சாரப்படி ”தாய்க் கஞ்சி” என்று அழைக்கப்படும் ஒருவகை உணவுடன் வந்து சந்தித்ததும் நினைவிருக்கிறது.

ஒவ்வொரு மனிதர்களும் வித்தியாசமானவர்கள். ஆனால் ஏதோவொரு நண்ணிய உணர்வொன்று காலமெல்லாம் எம்மை பிணைத்துப்போடுகிறது. அது எது என்று தேடுவதில் அர்த்தமில்லை. சில வேளைகளில் சில கேள்விகளுக்கு பதில் இல்லை.

காலம் மனிதர்களை நேசி, அவர்களை சம்பாதி என்ற தத்துவத்தை இப்படியான மனிதர்களின் மூலம் எனக்குக் கூறிப்போய்க்கொண்டிருக்கிறது. என்வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் மனிதர்களை நான் எதிர்வரும் காலங்களிலும் சந்திக்கலாம். மனிதர்கள்தான் எங்கும் இருக்கிறார்களே.

2 comments:

  1. அருமையான ஞாபகங்கள் மீட்டும்
    பகிர்வு.

    ReplyDelete
  2. தங்களின் சிறந்த பகிர்வை வரவேற்கிறேன்.

    ReplyDelete

பின்னூட்டங்கள்