காலச்சக்கரத்தின் தடங்கள்

2010 மார்கழி மாத ஆரம்பத்தில் ஒரு மாலைநேரம், எதையும் சமைத்துண்ணும் நிலையில் நான் இருக்கவில்லை. மெதுவாய் ஜன்னலால் எட்டிப்பார்த்தேன். இருவர் தமக்குள் ஏதோ பேசியபடியே கடந்து போயினர். அவர்கள் பேசும் போது அவர்கள் வாயிலிருந்து குளிரின் காரணமாக ஆவி பறந்து கொண்டிருந்தது. எனவே வெளியில் சற்றுக் குளிர்  என்று அனுமானித்துக்கொண்டேன். 10 நிமிட நடையில் ஒரு தமிழ் உணவகம் இருக்கிறது. அங்கு போய் ஏதேனும் வாங்கிக் கொள்வோம் என நினைத்தபடியே குளிருக்கேற்ற உடைகளுடன் புறப்பட்டேன்.

நான் ஒரு புல்வெளியை கடந்தே செல்லவேண்டும் என்பதனால் அதை நோக்கி நடக்கலானேன். புல்வெளியினை சப்பாத்துக் கால்கள் மிதித்தபோது மனது ”நிலம்” இறுகிவிட்டது என்று அறிவித்தது. பனிக்காலங்களில் நிலம் கல் போல் இறுகிப்போவது வழமையானதொன்று. இவ்வருடம் இதுவே முதற்தடவையாக நான் அதை உணர்கிறேன். இது பற்றி சிந்தித்தபடியே நடந்து கொண்டிருந்தேன். திடீர் என்று மனதுக்குள் இன்னும் ஒரு மாதத்தில் ‌நான் நோர்வே வந்து இருபத்தியைந்து வருடங்களாகப்போகின்றன என்பதனை உணர்ந்தேன்.

எனது வாழ்வின் பெரும் பகுதி எனக்குச் சொந்தமில்லாத ஓர் நாட்டில் கழிந்திருக்கிறது என்று கூறவிரும்பினாலும், அப்படிக் கூறமுடியாதிருக்கிறது. காரணம் நான் இந்த நாட்டை எனது நாடாகவே நினைப்பது என்பதாயிருக்கவேண்டும்.

இருபத்தியைந்து வருடங்கள் என்பது நீண்ட காலம். ஒரு மனிதன், இருபத்தியைந்து வருடங்கள் கடந்து விடுவதற்கிடையில் பல விதமான பருவங்களை கடந்த விடுகிறான். எனது வாழ்வும் அப்படியானதே. வாழ்வு பற்றிய கவலை அற்ற காலங்களில் இருந்து, இன்று அது பற்றிய பல சிந்த‌னைகளுடனுடம், கிடைக்காத பதில்களுடனும் வாழும், இந் நாள் வரை, நான் கடந்த வந்த காலங்களை திரும்பிப் பார்க்கிறேன். ஒரு ரயில் பயணத்தில் கடந்து போன நிகழ்வுகள் போல் பலதும் தெளிவின்றியும், சில மிகத்தெளிவாயும் தெரிகின்றன.

இருபத்தியைந்து வருடங்கள் என்னை செதுக்கி விட்டிருக்கிறது. செதுக்கப்பட்ட நான், சில இடங்களில் மட்டும், எனக்கு அழகாகவே தெரிகிறேன். சில இடங்கள், எனக்கே என் மீது எரிச்சலை ஏற்படுத்துகின்றன. பல இடங்களில் மனதுடன் சமரசம் செய்து கொள்ளவேண்டியிருக்கிறது. அதிலும் சில சமரசங்கள் எனக்கு ஏற்பில்லாதவை.

மற்றவர்களுக்கு நான் ”அழகாய்” தென்படுகிறேனா என்று  கவலைப்படுவதில் எதுவித அர்த்தமும் இருப்பதாய் தெரியவில்லை, எனக்கு. இதையும் உணர்த்தியது கடந்து போன இருபத்தியைந்து வருடங்களே. எனது வாழ்வை வாழ்வது நான் மட்டுமே, மற்றவர்கள் அல்லவே. எனவே மற்றவர்களுக்கு நான் ஏன் அழகாய் இருக்கவேண்டும். எனக்கு நான் அழகாய் இருப்பதே முக்கியம் போல் இருக்கிறது.

கடந்து வந்த வாழ்க்கை என்னும் வெளியினைத் திரும்பிப் பார்க்கையில் எனது மகா முட்டாள்தனங்களும், எனது பலவீனங்களுமே ”இன்றைய வாழ்வின் போராட்டங்களுக்கு” காரணங்கள் என்று புரிந்து கொள்வது கடினமாயில்லை. சாண் ஏற முழம் சறுக்கினாலும், மனதானது ஒரு வித அமைதியை உணர்வதை மறுப்பதற்கில்லை.

வாழ்வின் பிற்காலங்கள் என்று சொல்லப்படும் 50 வயதினை நான் நெருங்கிக்கொண்டிருக்கிறேன். அதற்கு இன்னும் சில வருடங்கள் தான். ஆனால் வயதை உணரும் நிலையில் என் மனது இல்லை. அது எப்போதும் போல ”குதூகல வயதில்” இருப்பது போன்றே உணருகிறேன், அப்படியே செயற்படுகிறேன் போலவும் இருக்கிறது. அதுவே பல சமயங்களில் என்னை மகிழ்ச்சியாய் வைத்திருக்கிறது.

இதை தான் எனது தாயார் ”இனியாவது வளர்ந்தவர்கள் போல் நட” என்று அடிக்கடி குறிப்பிட்டுக்கொண்டே இருக்கிறாரோ என்னவோ? நான் வளர்ந்த குழந்தையாய் இருக்கவே விரும்புறேன்.  அதுவே மகிழ்ச்சியையும் தருகிறது. பணம், பதவி, பொருள் தராமுடியாதவொரு ஆத்மதிருப்தியை இந்த ”வளர்ந்த குழந்தை”  நிலை தந்து போகிறது.

குழந்தைகளுடன் குழந்தையாய் போகிறேன். அவர்களின் உலகினுள் அவர்களுடன் கைகோர்த்துச் செல்லும்போது மட்டுமே அதன் அற்புதம் விளங்குகிறது. ”குழந்தைப்பருவத்தின் அழகான வானவில் நிறங்களை உன்னோடு என்றும் வைத்திரு, உன் முதுமை வானவில் போன்று அழகாயிருக்கும்” என்னும் என்று எங்கோ வாசித்ததன் உண்மையும் புரியத்தொடங்கியிருக்கிறது.

கௌரவம், அந்தஸ்துக்கள், படோபகாரங்கள், வீண் ஆடம்பரங்கள் இவை எல்லாம் எவ்வளவு முட்டாள் தனமானவை என்பதை அறிந்து நிமிரும் போது வாழ்க்கை, நிம்மதியான தூக்கத்தின் பெறுமதி மேற்கூறியவையின் முன்னால் தூசுக்குச் சமானம் என்பதை உணர்த்திப் போகிறது.

இந்த இருபத்தியைந்து வருட காலத்தில் ஆரம்ப ஆண்டுகளைத் தவிர்த்து இன்று வரை இரட்டைக்கலாச்சார வாழ்க்கைமுறைமையையுடனேயே வாழ்ந்துவருகிறேன். அதன் பலன்களை அனுபவித்துமிருக்கிறேன். அவலங்களையும் உடலெங்கும் உணர்ந்துமிருக்கிறேன். தற்போது நான் உணர்வுரீதியாக ஒரு முழுத் தமிழனும் இல்லை, அதே வேளை ஒரு நோர்வேஜியனுமில்லை. கடந்த இருபத்தியைந்து ஆண்டுகளில் புதிதாய் முளைத்த ”நோர்வேஜியதமிழர்” என்னும் இனத்தைச் சேர்ந்தவனாகவே நான் என்னை அடையாளம் காண்கிறேன். நான் இலங்கையில் வாழ்ந்திருந்த காலத்தை விட இந்நாட்டில் வாழ்ந்த காலங்களே அதிகம். எனவே நான்  ”நோர்வேஜியதமிழனாகவே” இனியும் இருக்கப்போகிறேன் என்பது புரிந்துமிருக்கிறது.

இந்த நோர்வேஜியதமிழனாய் இருப்பது, நோர்வேயிலேயே சிக்கலாய் இருக்கிறது. ஏனைய தமிழர்களுடனேயே கலாச்சார மோதல்கள் வந்த போகின்றன. இங்கே இப்படியான நிலை என்றால், இலங்கைக்கு செல்லும் போதெல்லாம் தற்போது ஒரு அன்னியனாகவே உணருகிறேன். ஏன், எனது குடும்பத்தாருக்கும் எனது சிந்தனையோட்டங்கள் ஒரு அன்னியன் என்னும் நிலையை எற்படுத்தியிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. எனது தா‌யாரோ 1930களில் பிறநது இன்றும் இலங்கையில் வாழ்பவர். நானோ 2011 இல் மேற்கத்திய கலாச்சாரத்தின் பாதிப்பில் வாழ்பவன். எனது கருத்துக்களும், பிரச்சனைகளை அணுகும் முறையும் எனது தாயாரினால் ஏற்கமுடியாதிருக்கிறது. எமக்கிடையில் முன்பிருந்த கருத்தொற்றுமை தற்போதில்லை. மேற்கத்திய கலாச்சாரத்தின் நன்றும் தீதும் இப்படி பல கலாச்சார மோதல்களை ஏற்படுத்திக்கொண்டேயிருக்கின்றன.

தற்போதெல்லாம்  இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் இருந்த கலாச்சார விழுமியங்கள், உணர்வுநிலைகள் ‌அன்று இருந்ததைப் போன்று அதே அழுத்தத்துடன் என் மனதில் இல்லை. முன்பெல்லாம் திருநீறு இன்றி நான் வெளியில் செல்வதில்லை. ஆனால் தற்போது இறுதியாக எப்பொது திருநீறு அணிந்தேன் என்பதே ஞாபகமில்லாதிருக்கிறது. புனிதமான காதல், அதன் பின்னான வாழ்வு என்பன பற்றி வாழ்ந்தறிந்ததால் அவை பற்றிய யதார்த்தமான புரிதலையடைந்திருக்கிறேன். மேற்கத்திய, மேலோட்டமான உறவு முறைகள் போலவே எனது உறவு முறைகளும் இருக்கின்றனவோ என்று அஞ்சவேண்டியிருக்கிறது. ”நன்றும் தீதும் பிறர் தர வாரா”.

காலப்போக்கில் மேற்கத்திய சிந்தனாமுறை, செயல்முறைகள் என்னுள் பலமாகவே ஊடுருவியிருப்பதை அவதானிக்க முடிகிறது. முன்பு, எனது சிந்தனைமொ‌ழி தனித் தமிழில் இருந்து,  தற்போது அது, தமி‌ழ் கலந்த இந்நாட்டு மொழியாய் மாறியிருப்பதை உணர்கிறேன். ஆனால் தமிழ் மீதான ஆர்வமும் பற்றும் மட்டும் தினமும் அதிகரித்தப்போகிறது. அது மனதுக்கு பெரும் ஆறுதலாயிருக்கிறது

அண்மைக் காலங்களில் தாய்மொழியை, இரட்டைக்கலாச்சாரத்தை, சிந்தனை மொழியை எவ்வாறு, எதனடிப்படையில் வரையறுப்பது போன்ற வாத விவாதங்களை நண்பர்கள் பேசிக்கொள்வதால், அவர்களிடத்திலும் இந்தச் சிக்கல் இருப்பதை அறிவிக்கிறது.

இவையெல்லாம் சேர்ந்து, நான் ”ஒரு சுத்தத் தமிழன்” என்னும் அடையாளத்தை இழந்துவரும் ஒரு மனிதன், எனக் காட்டுகிறது என்னும் சிலரின் வாதத்தில் ஏற்பில்லை, எனக்கு. மாற்றங்களை ஏற்றுக்கொண்டு அவற்றுடன் பதார்த்தமாய்  வாழ்வதும், கால, சமுதாய மாற்றங்களுக்கு ஏற்ப எம்மை மாற்றியபடியே வாழும் ஒரு நோர்வேஜியத்தமிழனாயே என்னை அடையாளம் காண விரும்புகிறேன்.

இவன் ஒரு புலன் பெயர்ந்த தமிழன் என்று யாரும் திட்டலாம். அது உங்கள் கருத்து. மேற் கூறியது எனது கருத்து.


9 comments:

  1. வெளிநாட்டு வாழ்வு நீண்டதாயிருப்பின் அடையாளங்கள், மனவோட்டம் இப்படிதானிருக்கும்.
    தாய்நாட்டை மனதார மதித்தல் இதற்கு மாற்று மருந்து.

    ReplyDelete
  2. >மேற்கத்திய, மேலோட்டமான உறவு முறைகள் போலவே எனது உறவு முறைகளும் இருக்கின்றனவோ என்று அஞ்சவேண்டியிருக்கிறது.

    இல்லை என்றே நான் நினைக்கின்றேன் :-)

    ReplyDelete
  3. ஆழமாக யோசிக்கும் நாட்டை,மொழியை நேசிக்கும் உங்கள் வயதை ஒத்தவர்களின் மனநிலை இப்படித்தான் இருக்கிறது !

    ReplyDelete
  4. உங்கள் வளமான வாழ்க்கைக்கு எனது வாழ்த்துக்கள். "நீ எந்த நாட்டில் இருக்கின்றாயோ அந்த நாட்டிற்கு விசுவாசமாக இரு" என்ற அறிஞர் அண்ணாவின் வரிகள்தான் உங்கள் கதையை வாசிக்கும்போது மனதில் வருகின்றது. வெள்ளைக்காரனின் நாட்டில் வீடுவேண்டும்; அவர்கனது பணம் வேண்டும்; என்று வாழ்ந்துகொண்டு நான் சுத்தத்தமிழன் என்று ஒப்புக்குச் சொல்பவர்களுக்கு ஒரு நல்ல அடி. நோர்வேயியதமிழன் என்று சொல்லுவதே சாலவும் பொருந்தும். அன்புடன் கங்கைமகன்.

    ReplyDelete
  5. மிகவும் சுவாரசியமாகவும், சிறப்பாகவும் உமது மீள்பார்வை அமைந்துள்ளது. இதைப்படிக்கும்போது, இவை நம்மில் பலருக்கும் பொருத்தமாக அமைவது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகின்றது. மனமார்ந்த பாராட்டுக்கள். எனக்கு இதைப்படிக்கும்போது ஒரு விடயம் ஞாபகத்திற்கு வருகிறது. 1987 இல் Øytun folkehøy skole ஆரம்பநாள், மாணவர்களை ஒருவர்க்கொருவர் அறிமுகம் செய்துகொள்ளும் நேரம், Sanjay யின் நேரம் வந்தபோது, நீர் எழுந்து சொன்னவை.

    "JEG HETER SANJAY.....JEG KOMMER FRA HAREIDE" மண்டபம் நிறைந்த கரகோஷம். மறக்கமுடியுமா.....நீர் அன்றே நோர்வேஜியதமிழராகிவிட்டீரையா. வாழ்க உமது திறன்........ வளர்க உமது சிந்தனை வளம்.

    அன்புடன் சந்துரு

    ReplyDelete
  6. இந்த கட்டுரை அனைத்து புலம்பெயர் சமூகத்திற்கு உள்ளடக்குகிறது.
    நன்றி
    சிவா

    ReplyDelete
  7. ஆனால் வயதை உணரும் நிலையில் என் மனது இல்லை. அது எப்போதும் போல ”குதூகல வயதில்” இருப்பது போன்றே உணருகிறேன், அப்படியே செயற்படுகிறேன் போலவும் இருக்கிறது. அதுவே பல சமயங்களில் என்னை மகிழ்ச்சியாய் வைத்திருக்கிறது.// வாழ்த்துக்கள் ..அதுதான் வேண்டும்...

    ReplyDelete
  8. Age is a question of mind over matter. If you don't mind, it doesn't matter. ~Leroy "Satchel" Paige

    ReplyDelete
  9. ///கடந்து வந்த வாழ்க்கை என்னும் வெளியினைத் திரும்பிப் பார்க்கையில் எனது மகா முட்டாள்தனங்களும், எனது பலவீனங்களுமே ”இன்றைய வாழ்வின் போராட்டங்களுக்கு” காரணங்கள் என்று புரிந்து கொள்வது கடினமாயில்லை. சாண் ஏற முழம் சறுக்கினாலும், மனதானது ஒரு வித அமைதியை உணர்வதை மறுப்பதற்கில்லை. ///

    உங்கள் எழுத்துகளில் நிரம்பி வழியும் யதார்த்தத்தை ரசிகனாகவும் ஒரு மாணவனாகவும் பின் தொடர்கிறேன்,,,,, சொந்த அனுபவங்களை இப்படி அழகிய எழுத்துக்களில் எங்களை போன்றவர்களுக்கு அறிவாக பதிகிறீர்கள் நன்றி நண்பரே..

    ReplyDelete

பின்னூட்டங்கள்