பூக்களின் பூக்கள்

இன்று மதியம் போல் தொடர்மாடி விடுகளைக் கடந்து எனது வீட்டைநோக்கி நடந்து கொண்டிருந்தேன். ‌வெய்யிலும் வஞ்சகம் இன்றி காய்ந்து கொண்டிருந்தது. குழந்தைகளின் ஒலிகளும், விளையாட்டுக்களும் என்று சுற்றாடல் மகிழ்ச்சியாய் இருந்தாலும் நான் ஏதேதோ சிந்தனைகளுடன் நடந்து கொண்டிருந்தேன்.

என் அருகில்  ”ஹாய்” என்ற குழந்தையின் குரல் கேட்டு நிமிர்ந்தேன். புதிதாய் பூத்த பூ போன்றதோர் பெண்குழந்தை, அழகிய பெரிய கண்கள் சுருண்ட தலைமுடி கொழுத்த கன்னங்களுடன் அழகிய  பூக்கள் போட்ட ஒரு சிவப்பு நிற சட்டையுடன் நின்றிருந்தாள். அவளுக்கு  ஐந்து அல்லது ஆறு வயதிருக்கலாம். அவளின் அழகை ரசித்தபடியே ”ஹாய்” என்றேன்.
”உன் பெயர் என்ன?” என்றாள்
”சஞ்சயன்”
தன் பெயர் என்று ஏதோ ஒரு பெயர் சொன்னாள். ”புரியவில்லையே” என்ற போது மீண்டும் ”ரமீ” என்னும் உச்சரிப்பில் எதோ சொல்ல நானும் தலையாட்டினேன்.
”நாங்கள் பூ விற்கிறோம்,  உனக்கு வாங்க விருப்பமா?” என்றாள்

எனது மனமும் உடலும் உட்சாகமாகிப் போனது. சில ஆண்டுகளுக்கு முன் என்னவள்களும் சிறுமிகளாய் இருந்திருந்த காலங்களில், நான் பல தடவைகள் அவர்களிடம் பூ வாங்கியிருக்கிறேன்.  நான் வாங்கிய பூவை மீண்டும் எனக்கே விற்ற தலை சிறந்த விற்பனையாளிகள் என்னவள்கள். அந் நாட்களின் சுகந்தம் என் மனதை ஆட்கொள்ள....

புன்னகைத்தபடியே ”ம்.. என்ன விலை?” என்றேன்
”ஒரு குறோணர்”
”சரி” என்ற போது
” கண்களால் சிரித்தபடியே பூக்கள் அங்கிருக்கின்றன” என்று புல்வெளியி்ல் போடப் பட்டிருந்த ஒரு மேசையைக் காட்டினாள்.

அம் மேசைக்கருகில் மேலும் இரு சிறுமிகள் நின்றிருந்தனர். அருகில் சென்ற போது மேசை முழுவதும் புல்வெளியினருகே பூத்திருக்கும் பூக்களை கொய்து அழகாய் அடுக்கியிருந்தனர். அவர்களுடன் சற்று நேரம் உரையாடியபடியே
”இவற்றில என்ற நிற பூவை நான் எடுக்கலாம்?” என்றேன்.
இருவரும்  வெள்ளை எ்ன்றார்கள்.
”சரி.. அப்ப நான் இந்தப் பூவை எடுத்துக் கொள்கிறேன்” என்று கூறி ஒரு குறோனர் பணம் செலுத்தி பூவினைப் பெற்றுக்கொண்டேன். பணத்தைப் பெற்றவள் ”நன்றி” என்றாள். புன்னகைத்துக் கொண்டோம். பெரியதொரு சாதனை செய்த மகிழ்ச்சியை அவர்களின் கண்களில் கண்டேன். எங்கும் விற்பனைக்கில்லாத  மகிழ்ச்சியின் அடையாளங்கள் அவை.

நூற்றுக்கும் அதிகமான மிகச் சிறிய வெள்ளை நிறமான பூக்களைக் கொண்ட ஒரு தண்டு எனது மேசையில் இருக்கிறது. சற்று நீர் ஊற்றிப் பாதுகாத்திருக்கிறேன் அப் பூக்களை. அப்பூக்களைப் பார்க்கும் போதெல்லாம் நினைவுகள் நீரூற்றிப் போகின்றன எனக்கு. விலைமதிப்பற்ற பூக்கள் நாளையும் விற்கப்படலாம். ஒரு வாடிக்கையாளன் காத்திருக்கிறான்.


இன்றைய நாளும் நல்லதே



.

1 comment:

  1. Arumai! அந்தப்பிள்ளைகள் எவ்வளவு மகிழ்ந்திருப்பார்கள். பெரிய சாதனை செய்த மகிழ்வு அது. 1993ல் டெனிஸ் பெட்டகோவாக படித்து முடித்து 2008 வரை 6-12வயதுப் பிள்ளைகளோடு(børnehave) நர்சரி, அரிவரி வகுப்பு, (போனகாவ் கிளாஸ்)12.00மணிக்குப்பின்5மணிவரைஓய்வு நேரவகுப்பகளிலும் (fritidshjem) வேலை செய்துள்ளேன். அந்த அனுபவத்தில் கூறுகிறேன்.

    ReplyDelete

பின்னூட்டங்கள்