நண்பரின் பீபீசி கேட்கும் அன்டனாவும் ஒரு செய்தியும்

 இது 1990  இல் நடந்த கதை.
வட மேற்கு நோர்வேயில் ஒரு பாடசாலையில் கல்விகற்றுக்கொண்டிருந்த நேரம். இன்னும் பல தமிழர்களுடன் விடுதி மாதிரியானதோர் இடத்தில் வசித்திருந்தேன்.

பாடசாலை 5 - 6 மணிநேரங்களே நடக்கும். மிகுதிநேரத்தை என்னவென்று செலவழிப்பது என்னும் பிரச்சனை இருந்த காலம். மாலையில் பந்தடியும், முன்னிரவில் சீட்டுக்கட்டும், பின் இரவில் WWF ரெஸ்லிங்உம் என காலம் உருண்டோடிக் கொண்டிருந்தது. இன்டர் நெட், கூகில், முகப்புத்தகம் என்று உலகம் முன்னேறியிருக்காத நாட்களவை.

அந்நாட்களில் எம்முடன் இருந்தவர் ஒருவர் எங்கு 49 குரோணருக்கு குறைவாக எந்த சாமானைக் கண்டாலும் வாங்குவார். யாரும் தலையிடி 49 குறோணர்களுக்கு விற்றிருந்தாலும் வாங்கியிருப்பார் அவர். அவர் கடைத்தெருவிற்கு போனால் திரும்பிவரும் போது ஏதையாவது வாங்கி வராவிட்டால் அவருக்கு இருப்புக் கொள்ளாது. இப்படி அவர் வாங்கிய பொருட்களுக்குள் ஒரு பெரிய அன்டனாவும் அடக்கம். அதை நீட்டி விட்டால் கிட்டத் தட்ட  2 - 3 மீற்றர் நீளம் வரும். அதை டீ.வீ அல்லது ரேடியோ அன்டனாவுடன் கொளுவிடும் வசதியும் இருந்தது.

நண்பர் பீபீசி கேட்கும் போது அதைக் கொளுவுவார். அன்டனா பீபீசீயை நண்பரின் அறைக்கு அழைத்து வந்தது தினமும்.

இந்த நண்பரின் அறை எனது அறைக்கு பக்கத்தில் இருந்தது. நண்பரின் கடமைகளில், தினமும் காலையில் எழுந்தவுடன் காலைக்கடன் முடிப்பது மிகவும் முக்கியமானது. அதுவும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் ”அது”க்கு போகவேணும் அவருக்கு. நாம் வேண்டுமென்றே கழிப்பறைக்குள் குந்தியிருந்து கொண்டு அவரை கலவரப்படுத்துவதுமுண்டு.

ஒரு நாள் காலை நான் துக்கத்தில் இருக்கிறேன் எனது யன்னல் கண்ணாடி தட்டப்பட்டது. எனது அறை இரண்டாம் மாடியில் இருந்ததால் இப்படி திடமாக ஒரே சீராக யாரால் எனது யன்னல் கண்ணாடியை தட்டமுடியும் என்று சிந்தித்தவாரே யன்னல் சீலையை விலக்கினேன். நண்பரின் அன்டனா வந்து எனது யன்னல் கண்ணாடியை தட்டிக் கொண்டிருந்தது. மெதுவாய் யன்னலை திறந்து பார்த்தேன். நண்பர்தான் தட்டிக் கொண்டிருந்தார். நான் எட்டிப் பார்த்ததும் மகவும் மெதுவாய் அறைக்க வெளியே போகாதீர்கள். ஒருத்தனுக்கு விசர் வந்திருக்கு என்று சொன்னார். எனக்கு நித்திரை கலக்கத்தில் ஏதும் புரியவில்லை. எனவே மீண்டும் கேட்டேன். சொன்னதையே சொன்னார்.

எனக்கிருந்த நித்திரைக்கலக்கம் போய் பயம் பற்றிக் கொண்டது. என்ன நடக்குது என்ற போது. ஒருவரின் பெயரைக்கூறி அவருக்கு விசர் வந்திருப்பதாயும், அறைக்கு வெளியே அவர் கம்புடன் நடமாடுவதாயும், வெளியே போகும் எல்லோருக்கும் அடிக்கிறார் என்றம் சொன்னார்.

உங்களுடன் அவன் நல்லா கதைக்கிறவன் தானே. நீங்க ஒருக்கா என்னைய கக்கூசுக்கு போக விடச் சொல்லுங்கோ என்றார் நண்பர். அவரைப் பார்த்தால் எதையே  அடக்கமுடியாமல் அடக்கிக் கொண்டிருப்பது போலிருந்தார்.

சரி பார்க்கிறேன் என்று சொல்லிய பின் எனது அறைக் கதவை மெதுவாய் திறந்தேன். டேய் உள்ளுக்குப் போடா, வெளிய வந்தால் துலைந்தாய் என்றபடி கதவில் ஒரு பெரிய கம்பால் ஒரு அடி போட்டார் சுகயீனமுற்றிருந்தவர். மெதுவாய் அழைத்தேன் அவரை. சாகப்போறியே என்றார். அவர்  கேட்டதில் எனக்கு உடன்பாடு இல்லாதால் அறைக்கதவை மூடி நண்பரிடம் நடந்ததைச் சொன்னேன். நண்பர் தனது அன்டனாவை தந்து எனது பக்கத்து அறை நண்பரின் கண்ணாடியை தட்டி விபரத்தை சொல்லப் பணித்தார். இப்படியே அவரின் அன்டனா மூலமாக எங்கள் பகுதியில் இருந்த நண்பர்களுக்கு செய்தியை பரிமாறிக் கொண்டோம். 

இறுதியில் விடுதிப் பொறுப்பாளர் வந்த போதும் சுகயீனமுற்றவர் எமக்கு சொன்னதையே சொல்லி அவரையும் விடுதிக்கு வெளியே நிப்பாட்டி வைத்திருந்தார். போலீஸ், மன நல மருத்துவர்கள் என பலர் வந்து சுகயீனமுற்றவரை அழைத்துப்போனதும்  எனது நண்பர் மிக வேகமாக ஓடிப்போய் கழிப்பறை கதை மூடிக்கொண்டார்.

சுகயீனமுற்றிருந்தவர் ஒரு தமிழரே. அவர் முன்பும் தானே தன்னுடன் பேசிக் கொள்வார். எம்முடன் இலகுவில் பேச மாட்டார். தனிமை‌யையே நாடுவார்.

அவரை மனநல மருத்தவமனையில் சேர்த்து சிகிச்சையளித்த பின், அவர் தான் தனது பெற்றோரிடம் செல்ல விரும்புவதாகக் கூறியதால் அவர் இலங்கைக்கு அனுப்பப்பட்டார்.

எனது நண்பரோ, தன் அன்டனாவால் தான் நீங்கள் அடி வாங்காமல் தப்பினீர்கள் என்றும், இனிமேல் தன்னை நாம் நக்கலடிக்கக் கூடாது என்றும் எம்மை கலாய்த்துக் கொண்டிருந்தார். நாமும் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டியதாயிற்று.

சில மாதங்கிளின் பின் இலங்கைக்கு அனுப்பப்பட்ட சுகயீனமுற்றவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும், யுத்தத்தின் காரணமாக அவர் சில குடும்ப அங்கத்தவர்களை இழந்திருந்ததாகவும், அதனாலேயே அவர் மனநிலை பாதிக்கப்படிருந்ததாகவும் கிடைத்த செய்திகள் கூறின.

நெருங்கிய நண்பனாக இல்லாது விட்டாலும் சல காலம் பழகிய நட்பு துலைந்து போனது  பலரின் மனதையும் கனக்க வைத்தது.

அதனாலோ என்னவோ அந்த  மலிவு விலைஅன்டனா இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. எது எப்படியோ ... ஒரு செய்தியை அந்த அன்டனா  இன்னொருவருக்கு பரிமாறியிருக்கிறது என்பது மட்டும் உண்மை.


.

3 comments:

  1. அந்த அண்டனா உங்களியும்மொக்கை பதிவு போட வைத்திருகிறது......

    ReplyDelete
  2. இது மொக்கையில்லை. (அதாவது என் மண்டைக்குள் ஏறியவகையில்)

    ReplyDelete

பின்னூட்டங்கள்