மலைகளில் தொலைந்து போன மனப்பாரங்கள்

சில ஆண்டுகளுக்கு முதல் தொழில், வீடு, பொது வேலைகள் என ஓய்வே இல்லாது ஓடிக்கொண்டிருந்த போது மனமும் உடலும் களைத்து ஒரு சோர்வு மனதையும் உடலையும் பற்றிக் கொண்டது. எதிலும் வெறுப்பும், பிடிப்பற்றநிலையும், எரிச்சலும், களைப்பும், மகிழ்ச்சியின்மையும் தொடரத் தொடங்க பயந்து தான் போனேன் சற்று.

டாக்டரை தொடர்பு கொண்ட போது மிக ஆறுதலாகப் பேசி காரணங்களை அறிந்து, சொன்னார் உமக்கு மனச்சோர்வு வந்திருக்கிறது என்று. அது பற்றியும் விளக்கினா எர். இது நோர்வேயில் பெரிதாய் பரவிவரும் நோய் என்றும், அமைதியான வாழ்க்கையை இதற்கு மருந்து என்று சொல்லி ”குட் லக்” என்று சொல்லி கையை குலுக்கி வெளியே அனுப்பினார்.

நானாவது அமைதியாய் இருக்கிறதாவது என்ற ”வாழ்க்கை” மீண்டும் ஓடத் தொடங்கி சில காலதிற்குள் மீண்டும் அதே பிரச்சனை வர டாக்டர் வலு சீரியசாக 2 மாதம் சுகயீனலீவு தந்து, கனக்க அறிவுரைகள் தந்து வெளியே மீண்டும் ”குட் லக்” என்று சொல்லி கையை குலுக்கி வெளியே அனுப்பினார்.

அவர் சொன்ன மாதிரி நானும் வீட்டில் தங்கி ஆறுதலாக இருப்போம் என்று தான் நினைத்தேன். அந்த நாட்களில் 5 நிமிடம் நடந்தாலும்  ஓடிக்களைத்த குதிரை‌ போல நுரைதள்ளி மூச்சு விடுவேன். இந்த இம்சையால் நடப்பதையும் குறைத்துக் கொண்டேன். வீட்டில் இருப்பதும் கண்ட கண்ட நேரத்தில் தூங்குவதும் என்று சில பல நாட்கள் ஓடன. ஆனால் மனச்சோர்வு மட்டும் குறையவே இல்லை.

இந்த நேரத்தில் தான் எங்கள் ரோட்டறி கிளப்பில் உள்ள ஒரு மிகவும் வயதானவர் தனக்கும் இப்படியான நிலைகள் வந்து போன போது தான் மலைகளில் ஏறி இறங்கி, இயற்கையுடன் உறவாடி இந்தப்பிரச்சனையை தீர்த்துக் கொண்டதாக ஒரு உரையாடலின் போது தெரிவித்தார்.

அன்றிரவு எனக்கு ஏதோ ஞானம் வந்த மாதிரி இருந்தது. விடிந்ததும் குழந்தைகளை பாடசாலையில் விட்டு விட்டு, வீடு வந்து உடைமாற்றி மலைக்குப் புறப்பட்டேன்.

அந்த மலை எனது வீட்டில் இருந்து பார்த்தால் தெரியும். 4 கீமீ தூரத்தில் இருந்தது. இந்த ஊரில் வாழ்ந்திருந்த 13 வருடத்தில் ஒரு நாளும் இந்த மலையின் உச்சியை தொட்டதில்லை நான். அன்று ஏதோ ஒரு உந்துதலில் புறப்பட்டேன். தண்ணியும், நாலைந்து பாண் துண்டுகளும் வாழைப்பழம் முதுகுப்பையில் இருந்தது.

மெதுவாய் மலை அடிவாராத்தை அடைந்து ஏறத் தொடங்கி 10 நிமிடத்திலேயே வாழ்கை வெறுத்து விட்டது.  இதயமும், சுவாசப்பையும் எம்மால் முடியாது என்று கூச்சல் போட்டன. கால்கள் வர மாட்டேன் என்று அடம் பிடித்தன. மெதுவாய் குந்தியிருந்து ஆறுதலடைந்த பின் மெது மெதுவாய் நடக்கலானேன் உச்சியை நோக்கி. நானும் நடக்கிறேன் நடகக்கிறேன் உச்சி மட்டும் வரவேயில்லை. மனம் கெலித்திரிந்த போது  என்னைக் கடந்து ஒருவர் கீழ் இறங்கிக் கொண்டிருந்தார். உச்சிக்கு செல்ல எவ்வளவு நேரமாகும் என்ற போது 45 நிமிடங்கள் என்றார். ஏற்கனவே  இரண்டு மணிநேரம் ஏறியிருந்தேன்.. இன்னும் 45 நிமிடங்களா........ வாழ்க்கையே வெறுத்துவிட்டது. இருப்பினும்  உச்சியை தொடாமல் இறங்குவதில்லை என்பதில் திடமாயிருந்தேன். ஏறத்தாள 3 மணிநேரத்தின் பின் உச்சியை தொட்டபோது எதையோ சாதித்ததன் உணர்வு என்னை ஆட்கொண்டிருந்தது. மனது காற்றாய் மாறியிருந்தது.  மெதுவாய் இறங்கி வீடுவந்து சேர்ந்தேன். அன்றைய நாளின் பின் அந்த மலையை பல தடவைகள் ஏறியுள்ளேன். 3 மணியாயிருந்த நேரம் 56 நிமிடங்களாக குறைந்திருந்தது இறுதியாய் நான் ஏறியபோது.

மலையின் மருத்துவ மகத்துவம் மெதுவாய்ப் பிடிபடத் தொடங்கியது. நான் வாழ்ந்திருந்த வடமேற்கு நோர்வேயில் மலைகளுக்கு பஞ்சமில்லை. கிழமைக்கு 3 -4 நாலு மலைகள் ஏறினேன். புதிய புதிய மலையுச்சிகள் என் வசமாயின. உடம்பு களைப்பு என்னும் சொல்லை விரும்பத் தொடங்கியிருந்தது. இதயுமும், சவாசப்பையும் மீண்டும் என்னுடன் நட்பாயிருந்தன. எந்த மலையுச்சியையும் தொடுவது இயலாதகாரியமில்லை என்பது புரிந்தது. சில நாட்கள் 8-10பத்து மணிநேரம் வரை மலைகளில் நடந்து திரிந்திருக்கிறேன்.

நடக்கும் போது சிந்தனையும் கூடவே வந்து பேசியது, தர்க்கித்தது, விமர்சித்தது என்னை. மனதின் களைப்பு மெதுவாய் மறைந்து புதிய மனிதாயிருந்தேன் 2-3 மாதங்களில். இத்துடன் spinning  என்னும் சைக்கில் ஓட்டம் (குழுவாய் ஒரு இடத்தில் இருந்த படியே சைக்கில் ஓடுவது) தொடங்கினேன். அந்த வருடத்தின் பனிக்காலம் முழுக்க மலை ஏற முடியாவிட்டாலும் ‌spinning உம், உடற் பயிற்சியும் செய்தேன்.

உடற்பயிற்சிக்கும் மனதுக்குமான நெருங்கிய தொடர்பை நான் அறிந்து கொண்டது இங்கு தான். அந்த வருடம் எனது தம்பியுடன் அயர்லாந்தில் ஏறக்குறைய 600 கீமீ சைக்கில் ஓடும் மனத் தைரியத்தையும், உடற்பலத்தையும் தந்தது அந்த மலைகள் தான் என்றால் அதை நான் மறுப்பதற்கில்லை. மலையின் மருத்துவம் மகத்தானது.

மலை தான் வேண்டுமென்றில்லை...மனதை மீட்டெடுக்க.  ஆனால் உடற்பயிட்சி, உள்ளத்தை மீட்டத்தரும் என்பது மட்டும் உண்மையிலும் உண்மை.


.

2 comments:

  1. நல்ல அறிவுரை. வீட்டு பூந்தோட்ட பராமரிப்பு, கிளிகள் வளர்ப்பது, சமூகப்பணியும் சில அமைதி தரும்.

    ReplyDelete
  2. அழகான ஒரு நிகழ்வு. அதுவும் உண்மை நிகழ்வு வசிக்க உற்சாகமாக இருந்தது.
    அதுவும் ஒரு அனுவக பாடம். எல்லாம் முடியும் என்றால் முடியும் என்ற கருதும் தொனிகிறது இக் கதையில்

    ReplyDelete

பின்னூட்டங்கள்