ஜன்னலில் ஒரு பூ

 நான் ஒரு தொடர்மாடியில் குடியிருக்கிறேன். எங்கு செல்லவேண்டுமென்றாலும் அருகிலிருக்கும் தொடர்மாடியை கடந்தே செல்லவேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கப்பட்டிருக்கிறது.

அண்மையில் பல புதிய தமிழ்முகங்கள் அருகிலிருந்த தொடர்மாடியில் அடிக்கடி நடமாடியதை அதைக் கடந்து போனபோதெல்லாம் அவதானித்தேன். புதிதாய் குடிவந்தவர்களாக இருக்கலாம் அவர்கள்.

இதற்குப் பின்னான நாள் ஒன்றில் அந்த தொடர்மாடியை கடந்துகொண்டிருக்கிறேன்..

ஹாய்! என்றதொரு குரல் கேட்டு நிமிர்ந்தேன். இரண்டாம் மாடியில் கையில் ஒரு பொம்மையை  அணைத்தபடி ஜன்னலில் நின்றிருந்தாள் ஒரு சிறுமி. 4-5 வயதிருக்கும். சுறுண்ட தலைமுடி, அழகான கண்கள், இவையுடன் புன்னகை அணிந்து, மிக மிக அழகாய், எனது இளையமகளின் குழந்தைப்பருவத்தை நினைவூட்டும்படியாக நின்றிருந்தாள்.

எனக்கு மனதிலிருந்த கனத்த சிந்தனைகள் எல்லாம் மறைந்து உலகம் கணப்பொழுதில் அழகாகியது.

மேலே பார்த்து ஹாய் என்றேன்.

”நீ தமிழா” என்றாள் நோர்வேஜிய மொழியில்
”இல்லை”
”அப்ப”
”நீ என்ன நினைக்கிறாய்”
”சிறிலங்கா”
”இல்லை” என்றேன் சம்பாசனையை தொடர்வதற்காய்

சற்றே யோசித்தவள்
தெரியாது என்றாள்
பின்பு
ஆபிரிக்கா என்றாள்
ஆம் என்பது போல் தலையாட்டினேன்
சிரித்தாள் அழகாய்

பெயர் கேட்டாள்
வேண்டுமென்று ரவி என்றேன்
பலமாய் சிந்தித்தவளின் கண்கள் ஏதோ புரிந்தது போல் ஒளிகொண்டன
”நீ பொய் சொல்கிறாய்”
”நீ தமிழ்” என்றாள்

ஆம், நான் தமிழ் என்றும் எனது பெயர் சஞ்சயன் என்றேன்
உங்களின் பெயர் என்ன என்ற போது
ஏதோ ‌”லா”வில் தொடங்கிய பெயர் சொன்னாள்
லாவண்யா போலிருந்தது எனக்கு. அவளைப்போலவே அவளின் பெயரும் அழகாயிருந்தது.

தான் இந்த வீட்டில் வசிப்பதாயும்
தான் வெளியில் விளையாடும் போது வந்தால் தன்னுடன் விளையாடலாம் என்றும்,
தன்னிடம் புதிய சைக்கில் இருப்பதாயும்,
அன்று மாலை கோயிலுக்கு போவதாயும்
ஏதோ தனது உற்ற நண்பனுக்கு விபரிப்பது போல் விபரித்தாள்
சரி என்றேன்

அவளின் அழகான தமிழ் தெளிவாயும், வெளிநாட்டு வாடையற்றதாயும் இருந்தது. அவளின் வார்த்தைகள் மழைக்குப்பின்னான வானம் போல் அழகாயும், தெளிவாயும் இருந்தன.

விடைபெற்ற போது..
நாளை வருவாயா என்றாள்
ஆம். தினமும் இவ் வழியால் தான் போவேன்  என்றேன்
மிக அழகாய்ப் புன்னகைத்தாள்.

கைகாட்டி விடைபெற்ற போது கைகாட்டினாள்..
தொடர்மாடி மறைய முதல் திரும்பிப் பார்த்தேன்
எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தாள்
கை காட்டினேன்
ஜன்னலில் ஒரு பூ அசைவது தெரிந்தது

............................

வாழ்வில் நாம் தேடுபவைகளை நாம் தேடாமலே எமக்கு கிடைக்கச் செய்கிறது ஏதோ ஒரு சக்தி. இதை கடவுள் என்றும் சொல்லலாம் அல்லது எனது பாஷையில் லாவண்யா என்றும் சொல்லலாம்.

இன்றைய நாளும் நல்லதே.


.

2 comments:

  1. நீங்கள் நம்ம ஆளே நைஸ்

    ReplyDelete
  2. இதை வாசித்துவிட்டேன், ஆனால் மனதில் குழப்பமாக இருந்தது,
    இதில் உங்கள் ஏக்கம் நியாயம் மனதே. எல்லாம் அவன் செயல்.
    நாம் அறிவோம் பரா பரனே. வாழ்க உங்கள் எழுத்து திறன்

    ReplyDelete

பின்னூட்டங்கள்