விசரனின் வாரம்

தமிழ்மண நட்சத்திரவாரத்திற்காக (ஜூலை 19 - 26. 2010) எழுதப்பட்ட ஆக்கம் இது
......................................................................................................................................................................
















 

ஈரானுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையில் வாழும் ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்த நண்பனொருவரின் கணணி திருத்தி, இங்கிலாந்து - அமெரிக்கா கால்பந்து விளையாட்டு பார்த்து களைத்துப் போய் வீடு வந்த போது தான் ஞாபகம் வந்தது அட நாம இன்று மெயில் செக் பண்ணலியே என்று. மடியில் வைத்து கணணியை இயக்கி கூகில் மெயில் பார்த்தேன். பலதும் பேஸ் புக் மெயில்களாக இருந்தது, ஒன்றைத் தவிர. தலைப்பு ”தமிழ் மணம் நட்சத்திர அழைப்பு” என்றிருந்தது. ஏதும் விலாசம் தப்பி வந்திருக்கிறதோ என்று யோசித்தபடியே திறந்தேன்.

அன்புள்ள பதிவர் விசரன் அவர்களுக்கு! எனறிருந்தது முதல் வரி.. அட..அப்ப உனக்குத்தான் என்று சொல்லியது மனது.
மேலும்... தாங்கள் வரும் ஜூலை மாதம் 19 ஆம் நாள் முதல் ஜூ்லை 26 ஆம் நாள் வரை தமிழ்மணத்தில் நட்சத்திரமாக இருக்க அன்புடன் அழைக்கிறோம். உங்கள் ஒப்புதலை எங்களுக்கு விரைவில் தெரியப்படுத்தவும் என்றும் எழுதியிருந்தது.

நெஞ்சு பயத்தில் கொஞ்சம் சத்தமாக அடித்துக்கொண்டது. கனக்கத் தொடங்கியது தோள்கள் பயத்தில். நமக்குத் தானா இந்தக் கடிதம் என்று மீண்டுமொரு முறை பார்த்துக் கொண்டேன்.. சத்தியமாய் ”விசரன்” என்று என் பெயர் தான் அங்கிருந்தது.

ஆறுதலாய் வாசித்தேன் கடிதத்தை. ஏன் என்னைத் தெரிவு செய்தார்கள் என்று தேடிய போது ”தமிழ்மணம் நட்சத்திர நிர்வாகியால் உலகளாவிய தமிழ்வலைப்பதிவர்களில் குறிப்பிடத்தக்க அளவில் எழுதிவரும் ஒரு வலைப்பதிவர் இந்த வார நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்” என்றிருந்தது ஒரு இடத்தில்.

அய்யா தமிழ்மணம்! இது கொஞ்சம் டுமச்சா இல்லயா உங்களுக்கு? ஏதும் காமடீ கீமடீ பண்ணுகிறீறா?

நான் ஏதோ என்பாட்டில் மனதுடன் பேசி, அதை எழுதிக் கொண்டிருந்ததை பார்த்து என்னையும் ”தமிழ்மணம் நிர்வாகி, உலகளாவிய தமிழ்வலைப்பதிவர்களில் குறிப்பிடத்தக்க அளவில் எழுதிவரும் ஒரு வலைப்பதிவர்” என்று சொல்வதை நான் பலமாக ஆட்சேபிக்கிறேன். அதற்குத் தகுந்தவர்கள் பலர் எனக்கு முன்னால் நீண்டு பெருத்த வரிசையில் இருக்கிறார்கள்.

நட்பே! நான் மிகச் சாதாரணமானவன்.

கனதியான அந்த கடிதத்தை வாசித்த பின் மனதுடன் பேசி பதில் சொல்வதாகப் பதில் போட்டிருந்தேன் தமிழ்மணம் நிர்வாகிக்கு. மனம் சம்மதத்தைத் தந்ததால் தற்பொழுது இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்..  எழுத வாய்ப்பளித்த தமிழ்மணத்திற்கு எனது நன்றிகள்.

2006 இல் விசரன் என்னும் பெயரில் பதிவுலகத்துக்கு ஆறிமுகமாகியிருந்தாலும், கடந்த பத்து மாதங்களாகவே எனது வாழ்பனுபவங்களை எழுதத் தொடங்கி, தற்போதும் என்னைக் கடந்து போகும், கடந்து போன அனுபவங்களை  இணையத்தில் பகிர்ந்து கொள்கிறேன். கற்பனை கலந்த கதைகளுக்கு எனது பதிவுலகில் இடமில்லை. எனது கண்கள் கண்டதையும், காது கேட்டதையும், மனது பரிந்துகொண்டதையுமே பதிய விரும்புகிறேன். இந்தப்பதிவு எனது 50 வது பதிவு  (திட்டமிடப்பட்ட செயல் அல்ல). ஆச்சரியமாக இருக்கிறது திரும்பிப் பார்க்கும் போது.

கடந்து போகும் பலரும், சுமக்கமுடியாத சுமைகளை சுமந்து திரிகிறார்கள். என்னையும் தோழனாய் நினைத்து, துயரம் பகிர்ந்து எதையெதையோ கற்பித்துப் போகுமிவர்கள் எனக்கு போதிமரங்கள்.

தமிழர்கள் மட்டும் தான் சோகத்தின் சொந்தக்காரர்கள் இல்லை. உலகம் பூராவும் சோகம், மண்ணில் ஊறிய ஈரம் போல் ஊறிக் கனத்துக்கிடக்கிடக்கிறது, பலரின் வாழ்க்கையில்.

எத்தனையோ அனுபவங்களை பகிர்ந்து கொண்ட இவர்களுக்கும் நான் நன்றி கூறியே ஆக வேண்டும்.

வலி பகிர மொழி தேவையில்லை என்பதை கற்றிருக்கிறேன். காதும், கண்ணீரும், வலிதுடைக்கும் புன்னகையும் காணும், மொழி கடந்த வலிகளின் உலகை கடந்துவர.  அற்புதமானதோர் உலகமது. முடிந்தால் எட்டிப்பாருங்கள், அதிசயத்துப்போவீர்கள்.

இனிவரும் 7 ஏழு நாட்களும் நீங்கள் விரும்பினாலோ, விரும்பாவிட்டாலோ இந்த விசரனின் பினாத்தல்களை கேட்டே ஆக வேண்டும் என்று உங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.  சற்றே பொறுமை கொள்ளுங்கள்.

என் எழுத்துக்களில் எழுத்துப்பிழைகளும், இலக்கணப் பிழைகளும் இருப்பதாக விமர்சனமுண்டு. திருத்திக் கொள்ள முயற்சிக்கிறேன்.
நான் முழுமையானவனல்லன். அதை நாடுபவனுமல்லன். நான் மிகச் சாதாரணமானவன்.

என்னுடன் பதிதாய் அறிமுகமாகும் நண்பர்களே! பின்னூட்டமிட்டு தோளில் தட்டித்தரவும், தலையில் குட்டவும் உங்களுக்கு உரிமையுண்டு.

வாருங்கள்,தோழமையின் கரம் பற்றி மெதுவாய் உலா வருவோம்.

.

2 comments:

  1. நட்சத்திர வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  2. நட்சத்திர வாழ்த்துக்கள் :)

    ReplyDelete

பின்னூட்டங்கள்