Eravur United Sports Clubஉம், சந்திரே அய்யாவும், அந்தக் காலத்து சில ஞாபகங்களும்.

சந்திரே அய்யா (சந்திரே என்பது ஒரு பெயர். அய்யா என்றால் சிங்களத்தில் அண்ணண் என்று பொருள்படும்)

சந்திரே அய்யா, சிங்கள இனத்தவர், எங்கள் கிரிக்கட் அணியின் குரு, சக விளையாட்டாளன், இது தவிர்ந்த நேரங்களில் ஏறாவூர் மார்க்கட்டில் மரக்கறி விற்கும் வியாயாரி. சிறந்த ஆளுமையுள்ளவர். அவர் எப்படி அறிமுகமாகினார் என்பது ஞாபகமில்லை, ஆனால் இன்னும் ஞாபகத்தில் இருக்கும் மனிதர்களில் ஒருவர். ஏறத்தாள 30 -33 ஆண்டுகளுக்கு முன்னான நினைவுகளிவை. இருப்பினும் இன்றும் மனதை தென்றலாய் தடவிப் போகும் ரம்யமான பால்யகாலத்து நினைவுகள்.

வெளிநாட்டு வாழ்க்கையின் ரணங்களை ஆற்றிக் கொள்ள நான் எனது பழைய ஞாபகங்களுக்குள் நான் மூழ்குவதுண்டு. இன்றும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். 20:20 கிறிக்கட் போட்டிகளைப் பார்த்த பாதிப்போ என்னவோ இன்று சந்திரே அய்யா ஞாபகத்தில் வந்திருக்கிறார்.

1970 களின் இறுதி 1980 களின் ஆரம்பம். எனக்கு பதின்ம வயது.  எனது அப்பாவைத் தவிர்ந்த மற்றயதெல்லாம் அழகாய்த் தெரிந்திருந்த கலமது.

எனது (எமது) ஆட்சியெல்லையாக ஏறாவூரும், செங்கலடியும் இருந்தது. நட்பு வட்டத்தில் இஸ்லாமியர்களும், சிங்களவர்ளும், தமிழர்களும் சரிசமமாய் குடியிருந்தனர். இனபேதங்களையும் கடந்து மனிதம் வாழ்ந்திருந்த  காலம் அது.

ஏறாவூரில் மூன்றின மக்களும் அவ்வப்போது வெட்டுக்குத்துப்படுவதுண்டு ஆனால், அது எம்மை இம்மியளவும் பாதித்தில்லை.
என்ன மச்சாங் என்று சிங்கள நண்பர்களும், சுகமா இரிக்கியா என்று இஸ்லாமிய தோழர்களும் குசலம் விசாரித்து குதூகலாமாய் வாழ்ந்திருந்த நாட்களவை

இன்றைய இளைஞர்களுக்கு பரீட்சயமில்லாத வாழ்வு அது. மனிதன் மனிதனுடனும், இயற்கையுடனும் வாழ்ந்து கடந்த காலம். மானாட மயிலாட, கைத்தெலைபேசி, கணிணி, இணையம், இலத்திரனியற் விளையாட்டுக்கள் என எதுவுமற்று, நட்பே யாதுமாய் நாம் கடந்து வந்த பாதை. பால்யத்தின் பசுமையை அது.

அந்த நாட்களில் தான் ஏறாவூர் யுனைடட்ஜ (Eravur United Sports Club) (மன்செஸ்டர் யுனைடட் மாதிரி) உருவாக்கினோம். முக்கியமாக ஏறாவூரில் வாழ்ந்திருந்த சிங்கள நண்பர்களும், TCகுடிமனை வாழ் நண்பர்களும், நாம் சிலரும் சேர்ந்து சிங்கள மாகாவித்தியால ‌மைதானத்திலிருந்த சிறுசுகளை  பலவந்தமாக வெளியேற்றி, எங்களுக்கான மைதானத்தை உருவாக்கிக் கொண்டோம்.

அந்தச் சிங்கள மாகாவித்தியால அதிபருக்கு அழகானதொரு பூவினைப்போன்றதொரு மிக மிக அழகான மகள் ஒருத்தி இருந்ததையும் அவர்கள் மைதானத்துக்கு மிக மிக அருகிலேயே வாழ்ந்ததையும் நான் இங்கு குறிப்பிடாதுவிடுவேனேயாயின், அது மிகப் பெரிய வரலாற்றுத் தவறாகிவிடும்.

வறண்ட காதற் பூமியில் வாழ்ந்திருந்த பலருக்கு பூவாய் தெரிந்திருந்தாள் அவள். பாடசாலைச் சீருடையில் அவளொரு வெள்ளைத் தேவதை. சிலர் அவளின் காரணமாக, காலையிலும் அதீத உடற்பயிற்சி செய்தனர். அவள் பாடசாலைக்குச் செல்லும் அழகை ரசிப்பதற்காக.

நாம் விளையாடும் மாலை நேரங்களில் எமக்கு அடிக்கடி தாகமெடுத்து அவளின் வீட்டுக் கிணற்றிற்குச் சென்றதும், அவளைக் கண்டால் 150 மைல் வேகத்தில ”கிறிக்கட் பந்து வீசுவதும்”  ஏன்என்று ஏன்னென்று அவளுக்கு இறுதிவரையில் தெரியாது போனது, அவளின் பேரதிஸ்டமா இல்லை எங்களின் தூரதி்ஸ்டமா என்று தெரியவில்லை.

இனி எமது கதையின் நாயகன்பற்றிப் பார்ப்போம்.

ஏறாவூர் யுனைடட் உருவாவதற்கு முன்பே நாம் விளையாடும் மாலை நேரங்களில் சாரமுடுத்தியபடியே, கையில் Spots Star புத்தகத்துடன் தனது சைக்கிலில் வந்து எம்மைக் கவனிப்பார் சந்திரே அய்யா. அவரின் மருமகனும் (மோகன) எம்முடன் தான் விளையாடிக் கொண்டிருப்பான்.

எங்கள் விளையாட்டின் தரம் குறைவு என்று சொல்ல முடியாது. பல சிறந்த விளையாட்டு வீரர்கள் எம்முடன் இருந்தார்கள். முக்கியமாய் ரொனால்ட் என்றும் பறங்கிஇனத்து நண்பன். கவாஸ்கர் மாதிரி ஆள் கட்டை தான், ஆனால் கடுகு சின்னன் காரியம் பெரிது போன்று மிகச் சிறப்பாய் விளையாடுவான். ஆப் (Off) இல் பந்து வந்தால் அது அவனுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. கால்பந்திலும் விண்ணண்.

சந்திரே அய்யா எமக்கு  தனக்குத் தெரிந்த கிறிக்கட் சூட்சுமங்களை கற்றுத்தருவார். நாமும் முடிந்தளவு கற்றுத்தேர்ந்தோம்.

எங்களின் மைதானம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. புல்லும், திட்டு திட்டான மண்ணும் எப்படி பந்து வீசினாலும் விக்கட்டுக்கு மட்டும் போகாமல் வெறு எல்லா திசைகளையும் நோக்கியும் போய்க் கொண்டிருந்தது, பந்து.

இதைக் கண்ட சந்திரே அய்யா ஒரு நாள்!
”மல்லி.. மேம செல்லங்கரன்ட பா” (தம்பி.. இப்படி விளையாட முடியாது)
”மெனாஹறி கரலா அபி மேக ஹதாகரகன்ட ஓனே” (ஏதாவது செய்து மைதானத்தை சீர்செய்யவேண்டும்)
என்று ஒரு மைதானப் புரட்சிக்கு அடித்தளமிட்டார்.

கிறிக்கட் பிட்ச் செய்ய வேண்டுமென்றார்
மைதானத்தினுள் இருந்த மணல் மேடுகளை சமமப்படுத்தி,
மைதானத்தின் இரண்டு கரையிலும், புட்போல் போஸ்ட் நடவேண்டுமென்றார்.

சாரமுடுத்திய அந்தத் தலைவனுக்கு பின்னால் திரண்டு நின்றது ஒரு விடலைக் கூட்டம்.

அடுத்து வந்த காலங்களில் எப்போதும் இதுவே பேச்சாயிருந்தது.
அடுத்து வந்த சனிக்கிழமை கடலுக்கு குளிக்குப் போன போது (ஒரு சைக்கிலில் நாலு பேர் போவோம்), காட்டுக்குள் விழுந்திருந்த இரண்டு தென்னைகளை கட்டி இழுத்து வீதிக்கு கொணர்ந்து, பின்பு, வண்டில் பிடித்து  மைதானத்தில் இறக்கிய போது ஏதையோ சாதித்த சந்தோசம் அனைத்து முகங்களிலும் தெரிந்தது. உடனேயே கிடங்கு வெட்டி, தென்னங் குற்றிகளை நாட்டி, அவற்றிற்கு மேலாக களவெடுத்து வந்த மூங்கில் ஒன்றைக்கட்டி  புட்போல் விளையாடினோம். ஆன்று முதல் கோல் அடித்தவன் தேவைக்கு அதிகமாகவே ஆர்ப்பாட்டம் பண்ணினான்.

அன்று மாலை சந்திரே அய்யா இருவருக்கு ஒரு தேனீர் என்ற கணக்கில் எல்லோருக்கும் தேனீர் வாங்கித்தந்தார். நட்பின் ருசி அன்று அந்த தேனீரில் தெரிந்தது.

ஒரு கொசுறுத்த தகவல்:

சேவியர் என்று ஒரு அண்ணண், கப்பலில் வேலை செய்தவர் மைதானத்துக்கு அருகில் வாழ்ந்திருந்தார். அந்நாட்களில் அவர் புது மாப்பிள்ளை. அவரின் மோட்டார்சைக்கில், நடை உடை பாவனை என்பன எம்மை மிகவும் கவர்ந்தன. அந்தக்காலத்து கமல் மாதிரி இருப்பார், மிக அழகாகஉடுத்துவார். கால்பந்து விளையாட்டின் நுனுக்கங்களை எமக்கு கற்றுத் தந்தவர் அவர் தான்.  தற்போது கனடாவில் வசிக்கிறார் என அறிகிறேன்.

கால்ப்பந்து விளையாடுவதற்கு போஸ்ட் நட்டாச்சு..
அடுத்தது கிறிக்கட் பிட்ச்.
இது கொஞ்சம் சிக்கலான வேலை.
அதிகம் சிந்தித்தோம்.
பிட்ச் என்றால் இறுக்கமாக இருக்க வேண்டும்.
ஆனால், எங்கள் யுனைடட் மைதானம் கடல்மணலைப் போன்ற மணலைக் கொண்டது.

இதை தீர்க்க ஜடியா மன்னன் தயா ஒரு ஜடியா சொன்னான். இப்போ தயா என்றுஅழைக்க முடியாது, அவனை. ஊரில் அவனை “தயா சாமி” என்று பயபக்தியாய் அழைக்கிறார்களாம். என்னைப் பொறுத்தவரையில் ஆசாமி சாமியாகிவட்டான்
(இந்த ஆசாமி சாமியாகிய கதையை பின்பொரு நாள் சொல்கிறேன்)

பிள்ளையாரடியில இருக்கும் கிறவற்குழியில் இருந்து ஒரு ட்ராக்டர் நிறைய  கிறவல் எடுத்து வந்தால் கிட்டத் தட்ட முழு பிட்ச்சும் போடலாம் என்பது தான் அவனின் ஜடியா.

இதைக் கேட்ட சந்திரே அய்யா படு உசாராகிவிட்டார். தயாவின் முதுகில் தட்டிய படியே எம்மைப் பார்த்து “மினியாகே ஒலுவே டிகக் தியனவா” என்றார்.. நாம் கொல்லென்று சிரித்தோம். தயா சாமியும் சேர்ந்து சிரித்தார். (அதனர்த்தம் இவன்ட தலைக்குள்ளும் கொஞ்சம் இருக்கு என்பதாகும்)

சரி.. ஜடியா கிடைத்தாகிவிட்டது. எப்படி லாரி பிடிப்பது. எம்மவர்கள் எவரிடமும் அது இருக்கவில்லை. ஆனால் எனது நண்பனெருவனிடம் இருந்தது. அவனின் அப்பாவிடம் கேட்டபோது காசு தாருங்கள் வருகிறேன் என்றார். பிறகு தருகிறோம் என்ற போது மறுத்தார். எமது அவஸ்தை புரியாமல் இருக்கிறார் மனிதர் என்று திட்டியபடியே வந்தோம் அன்று.

மீண்டும் சந்திரே அய்யாவின் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது. தயா சாமி இந்த முறையும் நல்ல ஜடியா சென்னான். அதாவது இனி ஒவ்வொரு நாளும் விளையாட வருபவர்கள் எல்லாம் 5 சதம் கொண்டு வந்து தந்தால் தான் விளையாடலாம் என்று

எதிர்ப்பு இருந்தாலும் முதல் நாளே கிட்டத்தட்ட 1,50 ரூபாய் சேர்ந்ததை கண்டதும் எதிர்ப்பு மறைந்து போயிற்று. தயா சாமியின் தம்பி ராஜன் காசுக்கு பொறுப்பாய் இருந்தான்.

சில நாட்களின் பின் ஏறத்தாள 25 ரூபாயுடன் நண்பனின் அப்பாவிடம் போய் நின்றோம். மனிதர் மீண்டும் வாயைப் பிதுக்கினார்.

மீண்டும் கூட்டம் கூடிணோம். தயா 10 சதம் வாங்குவோம் என்ற போது சந்திரே அய்யா தனது வீட்டோ அதிகாரத்தை பாவித்து அதை நிராகரித்தார். மீண்டும் ஒரு சனிக்கிழமை 50 ரூபாயுடன் போன போது ட்ராக்டர் பெட்டியில ஏறுங்கோ என்றார் நண்பனின் அப்பா.

சந்திரே அய்யா ட்ரக்டர் மட்காட்இல் தளபதி போல உட்கார்ந்திருக்க தொண்டர் படையொன்று மண்வெட்டி, அலவாங்கு, இன்னும் பிக்கான் போன்ற ஆயுதங்களுடன் பின்னால் குலுங்கி குலுங்கி போய்க்கொண்டிருந்தது பிள்ளையாரடி கிறவல் குழிக்கு.

ட்ரக்டர் கிறவல் குழியில் நின்றதும் இயந்திரமாய் இயங்கினோம். சிலர் அலவாங்கால் குத்தி கிறவலை மலையில் இருந்து பிரிக்க, மற்றோர் கூட்டம் அதை சவள் மற்றும் மண்வெட்டியால் ட்ரக்டர் பெட்டிக்குள் வீசியெறிந்து கொண்டிருந்தது. ட்ரக்டர் பெட்டியினுள் நின்றவர்கள் அதை பெட்டி முழுக்க பரப்பிக் கொண்டிருந்தார்கள். சந்திரே அய்யா கட்டளையிட்டுக் கொண்டு வேலையை கவனித்துக் கொண்டிருந்தார். இடைக்கிடை பிக்கானால் கொத்தியும் தந்தார்.

வேர்யர்வை ஆறாய் ஓடியது.. அது பற்றி யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. வியர்வை கிறவல் புழுதியை தன்னுடன் கலந்து எல்லோர் முகத்திலும், முதுகிலும் ஒரு வித செம்மஞ்சல் நிறத்தில் நட்பின் சரித்திரத்தை வரைந்து கொண்டிருக்க, மறுபக்கத்தில் ட்ரக்டர் பெட்டி நிரம்பிக் கொண்டிருந்து.

ட்ராக்டர் பெட்டியை நிரப்பி பிள்ளையாரடிக்கு வந்த போது, சந்திரே அய்யா பிளேன் டீயும், பணிசும் வாங்கித் தந்தார். கையில் படிந்திருந்த கிறவல் புழுதியும் பணிசுடன் உள்ளே போனது. களைத்திருந்தாலும் களைப்பு தெரியவில்லை. சிரமதானம் தந்த சுகம் உடம்பெல்லாம் பரவியிருக்க நட்பு வட்டத்தின் நெருக்கமும் முன்பைவிட கூடியிருந்தது.

கிறவல் பாரத்தில் ட்ரக்டர் பெட்டி ஆடாமல் எம்மைத் தாங்கி வந்து எமது மைதானத்தில் இறக்கியது. ஒரு லோட் கிறவல் எங்களுக்கு ஏதொ ஒரு பெரிய சாதனையை செய்து முடித்துவிட்டோம் என்ற மன நிலையை தந்திருந்தது. அன்று மாலை பல மணி நேரம் கிறவல் லோட்க்கு பக்கத்திலேயே குந்தியிருந்து அடுத்த நாளை திட்டமிட்டுக் கொண்டிருந்தோம்.

நாம் கிறவலை எப்படி சமம்படுத்துவது என்றார் சந்திரே அய்யா. ஒருவருக்கும் அதை எப்படி செய்யலாம் என்று தெரிய தெரியவில்லை. இப்பவும் தயா சாமி தான் கை கொடுத்தார். இயந்திரமென்று இருப்பதாயும், அதுக்கு தனக்கு 5 பேர் தந்தால் இயந்திரத்தை எடுத்து வருவதாக சொன்னான்.

”மல்லி பொறு கிய்ன்ட எபா”.. என்றார் சந்திரே அய்யா சிரித்துக் கொண்டே.. (தம்பி பொய் சொல்லாதே என்பது தான் அதன் அர்த்தம்).

தயா சாமி தனது மாஸ்டர் தாக்குதல் திட்டத்தை விளக்கினான்.
செங்கலடிச்சந்தியில் வீதியை செப்பனிடுகிறார்கள். அங்கு ஒரு சிறிய ரோலர் இருப்பதாயும் அதைக் எடுத்துவந்தால் வந்தால் கிறவலை சமப்படுத்தலாம் என்றானே பார்க்கலாம். பலரின் ஏளனப் பார்வை அவனை நோக்கியிருந்தது. சுவாமி அதைக் பொருட்படுத்தவில்லை.

நக்கலை கவனிக்காத “தயா சாமி”, ரொனால்ட், பாமி, ராஜன், அப்துல்ஹை, மற்றும் எனது பெயரையும் சொல்லி இரவு 10 மணிக்கு வேலை ஆரம்பம் என்றான். நான் அம்மாவிடம் 10 மணிக்கு வெளியே செல்வதற்கு என்ன பொய் செல்வது என்று சிந்திக்கவேண்டியிருந்தது.

சந்திரே அய்யா மௌனமாயிருந்தார்.

அடுத்த நாளுக்கான திட்டங்களை கதைத்துப்பேசி முடித்து கலைந்து போனோம்.

இரவு பத்து மணிபோல், நண்பனிடமுள்ள பாடப்புத்தகம் எடுத்துவர வெளியே செல்வதாக் கூறியபோது, அம்மா சந்தேகமாய் பார்த்தார்.  நிட்சயமாக இவன் செக்கன்ட் சோவுக்கு போகிறான் என்று நினைத்திருப்பார்.

10 மணிபோல் ஜவர் படையணி செங்கலடி சந்தியை நெருங்கிக் கொண்டிருக்க, எனக்குப் பயத்தில் சிறுநீர் கழிந்துவிடும் நிலையில் இருந்தது. ஆனால் அதைக் காட்டாமல் வடிவேலு மாதிரி பில்ட்அப் குடுத்து கதைத்தபடியே வந்து கொண்டிருந்தேன். ”தயா சாமி” ஏதோ கோயிலுக்கு போவது போல் மிகவும் பயபக்தியுடன் எவ்வித கவலையுமின்றி வந்து கொண்டிருந்தான்.

பதுளை வீதியில் நாம் தேடிவந்த ரோலர் எமக்காக காத்துக் கொண்டிருந்தது. அதன் அருகே சென்ற “தயா சாமி” சுற்றும் முற்றும் பார்த்தபின் அதை தனியே இழுத்துப் பார்த்தான். அது அசையவேயில்லை.

இப்போது எல்லோரும் சாமியுடன் சேர்ந்து இழுக்கிறோம். மெதுவாய் தனது பிடிவாதத்தை தளர்த்தி அசையத் தொடங்குகிறது. அது அசைய அசைய எமது உட்சாகமும் அதிகரித்தது. திடீர் என எந்த வழியால் அதனை இழுத்துப்போவது போவது என்ற பிரச்சனை வந்தது. ஊரை இணைக்கும் முக்கியக வீதியால் ‌இழுத்துச்செல்வது  பிரச்சனையைத் தரும். எனவே வெகு விரைவாக உள்வீதியொன்றுக்குள் இழுப்பது என்று முடிவு செய்து, வேகமாய் இழுத்தபடியே நடக்கத் தொடங்கினோம். சற்றுத்  துரத்தில் ஒரு துவிச்சக்கரவண்டி வருவது தெரிந்தது. ஏதும் நடக்காதது போல் ரோலரின் மீது உட்கார்ந்திருந்து கதைத்துக் கொண்டிருந்தோம். துவிச்சக்கர வண்டிக் எம்மை கடந்ததும் வேகமாய் இழுத்து உள்வீதியினுள் புகுந்துகொண்டோம். ஏறத்தாள 2 மணிநேரம் இழுத்து வந்து ஒரு பற்றைக்குள் அதை ஒளித்து வைத்துவிட்டு வீடு சென்ற போது நேரம் இரண்டைக் காட்டிக் கொண்டிருந்தது. அம்மா அப்போதும் எனக்காக காத்துக் கொண்டிருந்தார். ஆனால் ஏதும் கேட்கவில்லை.

ஞாயிறு காலை நாம் மைதானததுக்கு செல்வதற்கு முனபே சந்திரே அய்யா மண்வெட்டியுடன் பிட்ச் போடப்படும் இடத்தை கிண்டிக் கொண்டிருந்தார்.

மைதானத்துக்கு நடுவே கிட்டடத்ட்ட 25-30 மீற்றர் நீளத்திற்கு 1 மீற்றர் அகலத்துக்கு 10 சென்டி மீற்றர் ஆழத்திற்கு மண்ணைக் கிண்டி மைதானத்தின் பள்ளமான இடங்களில் கொட்டிணோம். எமது மைதானத்துக்கு அருகாமையிலேயே ஏறாவூர் புகையிரத நிலையம் இருந்தது. அங்கிருந்த கருங்கற் குவியலில் இருந்து. அங்கிருந்து கற்களை எவரையும் கேட்காது எடுத்து துடுப்பாடும் இடத்தின் கீழ் இட்டு கிறவலைக் கொட்டத்தொடங்கினோம்.

தண்ணீர் தேவைப்பட்டது. வாளியை எடுத்துக் கொண்டு ஓடினார் தயா சாமி தேவதையின் கிணற்றிற்கு. விடுவார்களா மற்றவகள்? தண்ணி எடுத்து வர மாபெரும் போட்டீயே நடந்தது. சந்திரே அய்யாவுக்கு தெரியாது எமது ஆர்வத்தின் காரணம். அவர் அட.. பசங்களின் உட்சாகத்தைப்பார் என நினைத்திருப்பார்.

சாரத்தை மடித்துக்கட்டு கட்டிக் கொண்டு நாம் தண்ணீர் ஊற்ற ஊற்ற கிறலை காலால் மிதித்து மிதித்து நிரப்பிக் கொண்டிருந்தார் சந்திரே அய்யா. முழு பிட்ச்சுக்கும் கிறவல் போட்டு முடிந்தபின், ஒரு பலகையை பிட்ச்சுக்கு குறுக்கால் பிடித்து, இழுத்து ஓரளவு சமப் படுத்தினோம். மதிய வெயிலின் அகோரத்தில் கிறவல் சற்றே இறுகியிருந்தது மாலை. தயா சாமி தான் ஒளித்து வைத்திருந்த ரோலரை சிலருடன் சேர்ந்து எடுத்து வந்தான்.
அதைக் கண்ட சந்திரே அய்யா.. “மினியா ஹொந்த வடக் நே கரலா தியன்னே” என்றார் சிரித்தபடியே. (மனிசன் நல்ல வேலை செய்திருக்கிறான் என்று பொருள்படும்)
பிகு. அன்றைய நாளின் பின் அந்த ரோலர் பல மாதங்களாக எமது மைதானத்திலேயே வாழ்ந்திருந்தது.

உருளை உருண்டு, உருண்டு ஏறாவூர் யுனைடட் இன் பிரபல்யமான கிறிக்கட் பிட்ச்சை சமமப்படுத்தித் தந்தது. அன்று நாம் விளையாடவில்லை. பிட்ச்சை பார்த்தபடியே சுற்றி இருந்து கதைத்துக் கொண்டிருந்தோம். தயா சாமி மட்டும் தண்ணியூற்றினால் நல்லம் எனவும், தண்ணீர் எடுத்து வரவா எனவும் கேட்டபோது சந்திரே அய்யாவின் பார்வையாலேயே அவனை அடக்கினார். மற்றவர்கள் குமட்டுக்குள் சிரித்துக் கொண்டார்கள்.

அடுத்த நாள் புதிய பிட்ச்சில் கோலாகலமாக மாலையிருட்டு பந்தை மறைக்கும் வரை விளையாடினோம். அன்று முதல் பந்து சொன்ன சொல் கேட்டது.

அடுத்து வந்த விடுமுறையின் போது மேடாய் இருந்த நிலமும் சமமாக்கப்பட்டது. நெருஞ்சி முள்ளின் தொல்லையை டெக்னிக்கலாக யோசித்து தீர்த்துக் கொண்டோம் (வெட்டிய வாழைமரங்களை மைதானம் முழுக்க உருட்டி உருட்டி முள்ளுகளை அகற்றினோம்).

1983 என நினைக்கிறேன் தமிழ் சிங்கள புத்தாண்டின் போது பெரிதாய் விளையாட்டுக்கு ஒரு விழா எடுத்தோம்.

சைக்கில் ஓட்டப்போட்டி, மரதன், என ஆரம்பித்து மாலை கையிறு இழுத்தல், கால்பந்து சுற்றுப் போட்டி என ஆடி ஓய்ந்த போது ஊருக்குள் ஏறாவூர் யுனைடட் இன் மதிப்பு பலமாய் அதிகரித்திருந்தது.

(தயா சாமி சைக்கில் ஓட்டப் போட்டியின் போது முதல் மூன்று மைல்களுக்கும் முதலாவதாய் வந்து போட்டியின் இறுதில் கடைசியாய் வந்தான்.. கேட்டதற்கு சைக்கில் சரியில்லடா மச்சான் என்றார் சுவாமிகள்

புதுப் பிட்ச் இல் டென்னிஸ் பந்தில் ஓப் ஸ்பின், லெக் ஸ்பின் போடவும் பழக்கினார் சந்திரே அய்யா (பந்து இடது பக்கம், வலது பக்கம் திரும்பிய போதெல்லாம் குழந்தையாய் மாறி குதூகலித்தார் சந்திரே அய்யா.

அந்த மைதானததில் இன்னுமொரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியொன்றும் நடந்தது. எனது நண்பன் ஒருவன் விளையாட வந்து, மைதானத்துக்கு முன்னால் இருந்த வீட்டுக்கு பிற்காலத்தில் மாப்பிள்ளையாகினான். (மிச்சத்தை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்)

83ல் தயா சாமி கொழும்புக்கு வேலை தேடிப்போனார். புதிதாய் பலர் எம்முடன் இணைந்து கொண்டனர். சந்திரே அய்யாவின் தலைமையில் அடுத்தடுத்து வந்த காலங்களில் மட்டுக்களப்பு மாநகரசபை கிறிக்கட் டீமையும் வென்று வந்தோம் (அக்காலததில் அவர்கள் தான் மட்டக்களப்பு மாவட்ட சாம்பியன்களாக இருந்தனர்). அதன்பின் பல சில காலங்கள் வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பு வரை பிரபல்யமாக இருந்தது ஏறாவூர் யுனைடட்.

1984 - 85 இல் நாட்டு நிலைமைகளால் பலரும் ஏறாவூரை விட்டு இடம் பெயர்ந்தனர். முக்கியமாய் சிங்கள நண்பர்கள்.

நான் 1985ம் ஆண்டு கார்த்திகை மாதம் ஏறாவூரில் இருந்து வெளிநாடு புறப்பட்டிருந்தேன். புகையிரதம் “ஏறாவூர் யுனைடட்” மைதானத்தை கடந்தபோது மைதானம் வெறிச்சோடிக் கிடந்தது ஊரைப் பிரியும் என் மனதைப் போல்.

18 ஆண்டுகளின் பின் 2003 இல் ஊர் போன போது ஆமி காம்ப் ஆக மாறியிருந்த எமது மைதானத்தை தொலைவில் நின்று பார்க்கும் சந்தர்ப்பம் மட்டுமே கிடைத்தது. அங்கு ஏறாவூர் யுனைடட் மைதானம் இறந்து கிடந்தது, நாட்டின் ஒற்றுமையைப் போல்.

அந்த சிங்களத்து தேவதை கடைசிவரை எம்மை கண்டு கொள்ளவில்லை. முக்கியமாய் தயா சாமியை. அப்படி அவள் தயா சாமியை பார்த்திருந்தால் இரண்டு நன்மைகள் கிடைத்திருக்கும்.
1. தயா சாமி என்று அழைப்பதற்கு ஒருவரும் இருந்திருக்க மாட்டார்கள்.
2. நாட்டின் ஒற்றுமையை கொஞ்சமாவது கூடியிருக்கும்.

ஏனோ விதி இவையிண்டையும் விரும்பவில்லை.

நாடு அமைதியடைந்திருக்கிறது என்கிறார்கள் அரசியல்வாதிகள். முன்பு போல ஏறாவூர் யுனைடட் உருப்பெற்றால் மட்டுமே நம்புவேன் அதை.

கூகில் மப் இல் பிரபல ஏறாவூர் யுனைடட் மைதானத்தைப் பார்க்க இங்கு அழுத்தவும்
.........

எம்முடன் தோழமையுற்றிருந்த ஒரு ஜீவன் இன்று இல்லை. விடுதலைக்கு நாம் கொடுத்த விலைகளில் அவனின் உயிரும் ஒன்று.
ஆனால் நினைவுகள் மட்டும் பசுமரத்தாணியாய் மனதில்

இது அவனுக்கு அர்ப்பணம்


No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்